கொழுந்து விட்டு எரிந்த பழமையான ஆலமரம்; கண்டு கொள்ளாத வணிகர்கள்


கொழுந்து விட்டு எரிந்த பழமையான ஆலமரம்; கண்டு கொள்ளாத வணிகர்கள்
x

கொழுந்து விட்டு எரிந்த பழமையான ஆலமரத்தை வணிகர்கள் கண்டு கொள்ளாத நிலையில் தீயை அணைக்க போராடிய மாணவர்-இளைஞருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் செந்துறையில் இருந்து ஆர்.எஸ்.மாத்தூர் மற்றும் குழுமூர் செல்லும் பிரிவு சாலையில் உள்ளது தோப்பேரி. இந்த இடத்தில் 100 ஆண்டுகள் பழமையான ஆலமரம் உள்ளது. ஏராளமான பொதுமக்களும் அப்பகுதி வழியே செல்பவர்களும் இந்த மரத்தின் நிழலில் நின்று இளைப்பாரி செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று மாலை உதிர்ந்து விழுந்த மரத்தின் இலைகளில் மர்மமான முறையில் தீப்பற்றி சுமார் 2 மணி நேரமாக எரிந்து கொண்டு மரத்தின் அடிப்பகுதிக்கு வந்துள்ளது. அதன் பின்னர் மரத்தின் விழுதுகள் வழியாக மரத்தின் மீதும் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இந்த ஆலமரத்தின் எதிரே ஏராளமான வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் அவர்கள் இந்த தீயை அணைக்க எவ்வித முயற்சிகளும் செய்யாததோடு தீயணைப்பு துறை உள்ளிட்ட யாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் அந்த வழியே சென்ற இலங்கைச்சேரியைச் சேர்ந்த இளைஞர் கண்ணன் ஆலமரத்தில் கொழுந்து விட்டு எரிந்த தீயை அணைக்க முயற்சி மேற்கொண்டார். அதற்கு முன்னரே அந்த பகுதியில் வசிக்கும் அரசு பள்ளியில் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன் தீயை அணைக்க முயற்சி மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து கண்ணன் மற்றும் தமிழ்ச்செல்வன் வீட்டில் இருந்த தண்ணீர் குடங்களை தூக்கிக்கொண்டு வந்து மரத்தின் வேரின் அடிப்பகுதியில் கொழுந்து விட்டு எரிந்த தீயின் ஒரு பகுதியை அனைத்தனர். இதனால் பெரிய அளவில் தீ மரத்தின் மேல் பரவாமல் தடுக்கப்பட்டது. இது குறித்து செந்துறை தீயணைப்பு வீரர்களுக்கு கொடுத்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் செந்துறை போலீசார் விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 2 மணி நேரமாக தீப்பிடித்து மரத்தின் அடி வேறு வரை தீ பரவிய நிலையிலும் அப்பகுதியில் உள்ள வணிகர்கள் தீயை அணைக்க முயற்சி செய்யாதது பெரும் வேதனையை ஏற்படுத்தியது. இளைஞர் கண்ணன் அப்பகுதியில் வசிக்கும் சிறுவன் தமிழ்ச்செல்வன் ஆகியோர் துணிச்சலுடன் வீட்டில் இருந்து குடத்தில் தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைக்க போராடியதை தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் பாராட்டினர். இந்த நிலையில் மரத்தின் கிளைகளில் பற்றிய தீ முழுமையாக அனைக்கப்படாததால் இரவில் மீண்டும் மரத்தில் தீப்பற்றியது. அதனைத் தொடர்ந்து மீண்டும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மரத்தின் மீது ஏறி தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story