கல்லூரிக்கு சரிவர செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
ஆர்.கே.பேட்டை அருகே கல்லூரிக்கு சரிவர செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
என்ஜினீயரிங் மாணவர்
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் விவசாயி. இவரது மகன் ஜீவா (வயது 21). இவர் வேலூர் மாவட்டம் வேலூரில் உள்ள தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியில் சிவில் என்ஜினீயரிங் 3-வது ஆண்டு படித்து வருகிறார். இவர் சரிவர கல்லூரிக்கு செல்வதில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று தந்தை முருகன் அவரது மனைவியும் வயலுக்கு சென்று விட்டு திரும்பி வந்தனர்.
அப்போது வீட்டில் மகன் ஜீவா இருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நாங்கள் கஷ்டப்பட்டு வெயிலில் வயலில் வேலை செய்துவிட்டு வருகிறோம். உன்னை கஷ்டப்பட்டு படிக்க வைத்தால் நீ கல்லூரிக்கு செல்லாமல் இப்படி வீணடிக்கிறாயே என்று ஆதங்கப்பட்டு மகனை கண்டித்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு முருகன் பால் கறக்கவும், அவரது மனைவி வீட்டில் வேலைகளை செய்யவும் சென்று விட்டனர்.
தூக்கில் தொங்கினார்
இதனால் மனவேதனை அடைந்த ஜீவா வீட்டில் உள்ள அறைக்குள் சென்று தூக்குப்போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் மகன் சாப்பிட வராததால் அறைக்குள் சென்று பார்த்தபோது ஜீவா தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜீவாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சோளிங்கரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.