வெங்கல் அருகே மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்த ஊழியர் சாவு


வெங்கல் அருகே மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்த ஊழியர் சாவு
x

வெங்கல் அருகே மின் கம்பத்தில் இருந்து தவறி விழுந்த மின்வாரிய ஊழியர் சிசிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் அருகே உள்ள வதட்டூர் கண்டிகை கிராமம், பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்தவர் விஜயகுமார் (வயது 24). இவர் கீழானூர் கிராமத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், கடந்த 13-ந்தேதி கீழானூர் மின்வாரிய அலுவலகம் எதிரே இருந்த மின் கம்பத்தில் ஏறி பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்கம்பம் சரிந்தது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த விஜயகுமார் படுகாயம் அடைந்தார். படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

பின்னர், மேல்சிகிச்சைக்காக அங்கிருந்து விஜயகுமார் சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பயனின்றி நேற்று முன்தினம் விஜயகுமார் பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் குறித்து விஜயகுமாரின் தந்தை முத்து நேற்று வெங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு சென்னை சென்டிரலில் இருந்து புறநகர் மின்சார ரெயில் ஒன்று வந்தது. அந்த ரெயிலில் இருந்து இறங்கிய சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், கும்மிடிப்பூண்டி பஜார் நோக்கி செல்வதற்காக ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

அப்போது சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கிச்சென்ற சரக்கு ரெயில் ஒன்று அவர் மீது மோதியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். வெள்ளை சட்டை அணிந்திருந்த அவர் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி தலைமையில் கொருக்குபேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story