சென்னை: கேளிக்கை விடுதி விபத்து - 2 பேர் கைது


சென்னை: கேளிக்கை விடுதி விபத்து - 2 பேர் கைது
x
தினத்தந்தி 29 March 2024 9:37 AM IST (Updated: 29 March 2024 1:41 PM IST)
t-max-icont-min-icon

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.

சென்னை,

சென்னை ஆழ்வார்ப்பேட்டை, சேமியர்ஸ் சாலையில் பிரபல மதுபான கேளிக்கை விடுதி இயங்கி வருகிறது. தொழிலதிபர்கள், ஐ.டி. நிறுவனத்தை சேர்ந்தவர்கள் இந்த கேளிக்கை விடுதிக்கு வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் இந்த விடுதி நேற்று வழக்கம் போல் உற்சாகமாக செயல்பட்டு கொண்டிருந்தது. வாடிக்கையாளர்கள் சிலர் உற்சாக மிகுதியில் இருந்தனர்.

இந்த நிலையில் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை திடீரென்று இடிந்து விழுந்தது. குண்டு வெடித்தது போன்று சத்தம் கேட்டதால் கேளிக்கை விடுதிக்கு வந்திருந்த வாடிக்கையாளர்களும், ஊழியர்களும் அலறியடித்து ஓட்டம் பிடித்து வெளியேற முயன்றுள்ளனர். எனினும் கட்டிட இடிபாடுகளில் 5-க்கும் மேற்பட்ட நபர்கள் சிக்கி கொண்டதாக தெரிகிறது.

இந்த விபத்து குறித்து போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சைதாப்பேட்டை, எழும்பூர், அசோக்நகர் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து 3 வாகனங்களில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா, இணை கமிஷனர் சிபி சக்கரவர்த்தி, உதவி கமிஷனர் பாரதிராஜா உள்பட போலீஸ் உயரதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்களும், போலீஸ் பேரிடர் மீட்பு குழுவினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டனர். போதிய வெளிச்சம் இல்லாததால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டது.

எனினும் இடிபாடுகளில் சிக்கிய 5 பேரில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். அவர்களது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பலியானவர்கள் மணிப்பூரை சேர்ந்த மேக்ஸ் (வயது 22), திருநங்கை லல்லி (22), சைக்கோள் ராஜ் (48) என்பது அடையாளம் காணப்பட்டது.

விபத்து நடைபெற்ற கேளிக்கை விடுதியை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், 'இந்த விபத்துக்கான காரணம் குறித்து நான் பொத்தாம் பொதுவாக கூற முடியாது. முழுமையான விசாரணைக்கு பின்னர் தெரிய வரும்.' என்று கூறினார். இதையடுத்து மாநகராட்சி சார்பில் கேளிக்கை விடுதிக்கு 'சீல்' வைக்கப்பட்டது.

இந்தநிலையில் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பதியப்பட்ட வழக்கில் விடுதியின் உரிமையாளர் மற்றும் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். மெட்ரோ பணிகளுக்கும் விபத்துக்கும் தொடர்பு இல்லை என மெட்ரோ நிர்வாகம் விளக்கம் அளித்த நிலையில், இதற்கான காரணம் குறித்து அபிராமிபுரம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story