ஆடி மாத முதல் வெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


ஆடி மாத முதல் வெள்ளியையொட்டி  அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு  திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x

ஆடி மாத முதல் வெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் ஆடி மாத முதல் வெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மோகனூர், கொமாரபாளையம்

மோகனூர் சுப்ரமணியபுரம் காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ துர்க்கை அம்மனுக்கு ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி பல்வேறு அபிஷேகம் செய்து தங்ககவசம் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மோகனூர் அருகே கொமாரபாளையத்தில் உள்ள மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில்களில் பால்குட அபிஷேகம் நடைபெற்றது. காவிரி ஆற்றில் புனித நீராடி பக்தர்கள் மேளதாளங்களுடன் பால்குடம் எடுத்து வந்து சாமிக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்று மலர் அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் கொமாரபாளையம், பாலப்பட்டி, செங்கப்பள்ளி, களிமேடு, வேட்டுவம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

பரமத்திவேலூர்

பரமத்திவேலூரில் உள்ள மகா மாரியம்மனுக்கு ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையன்று பால்குட அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் நேற்று மகா மாரியம்மனுக்கு 32-ம் ஆண்டு 108 பால்குட அபிஷேக விழா நடைபெற்றது. பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனிதநீராடி பால்குடங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்தனர். பின்னர் மகா மாரியம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் வேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

பின்னர் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மன் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பால்குட அபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை வேலூர் மகா மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழுவினர், பால்குட அபிஷேக குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். பரமத்திவேலூரில் உள்ள பேட்டை புது மாரியம்மன் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதையடுத்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருச்செங்கோடு, குமாரபாளையம்

திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற சின்ன ஓங்காளியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. விழாவில் கோவிலில் குவிந்த பெண்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் பக்தர்களுக்கு கூழ் வழங்கப்பட்டது

குமாரபாளையத்தில் உள்ள காளியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. விழாவையயொட்டி இனிப்பு வகைகளை கொண்டு அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. காலை முதல் மாலை வரை சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

எருமப்பட்டி

எருமப்பட்டி அருகே பொட்டிரெட்டிபட்டியில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி மகா மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கூல் வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் கோவில் பிரசாதமாக கூல் ஊற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story