அரசு கல்லூரிகளில் கூடுதலாக 20 சதவீதம் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்க வேண்டும்; பழனிநாடார் எம்.எல்.ஏ. கோரிக்கை
அரசு கல்லூரிகளில் கூடுதலாக 20 சதவீதம் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்க வேண்டும் என அமைச்சருக்கு பழனிநாடார் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
சுரண்டை:
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு பழனி நாடார் எம்.எல்.ஏ. அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டம் சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் 2800-க்கு மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இக்கல்லூரியில் சுரண்டை மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த 2022- 2023-ம் கல்வியாண்டில் அரசு கலை அறிவியல் கல்லூரியில் கூடுதல் மாணவர் சேர்க்கைக்காக அரசாணை வெளியிட்டது. தற்போது 2023-24-ம் கல்வியாண்டில் அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் மற்றும் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவ-மாணவிகளுக்கு மருத்துவ கல்லூரிகளில் 7.5 சதவீத இடஒதுக்கீடு என பல சலுகைகளை தமிழக அரசு அறிவித்துள்ளதால் அரசு கல்லூரியில் சேர்வதற்கு அதிகமான மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பித்துள்ளனர்.
சுரண்டை நகராட்சியை சுற்றியுள்ள கிராமப்புற மாணவ, மாணவிகள் நலனை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டும் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர் சேர்க்கையில் கூடுதலாக 20 சதவீதம் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை அதிகப்படுத்த ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.