கூத்தன் கால்வாய் தூர்வார ரூ.70 லட்சம் நிதி ஒதுக்கீடு
கூத்தன் கால்வாய் தூர்வார ரூ.70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்த அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.
சாயல்குடி,
கடந்த 2 ஆண்டுகளாக கமுதி, முதுகுளத்தூர் பகுதிகளில் அமைச்சர் ராஜகண்ணப்பன் முயற்சியால் வைகை தண்ணீரை கண்மாய்களில் நிரப்பி சில பகுதிகளில் விளைச்சல் ஏற்பட்டது கடலாடி தாலுகாவில் உள்ள வரத்து கால்வாய்கள் தூர்வாரப்படாததால் மழையை மட்டுமே விவசாயிகள் நம்பி வந்தனர். கால்வாய்கள் புதர் மண்டி கிடப்பதால் மழைக்காலங்களில் கண்மாய்களுக்கு தண்ணீர் வராமல் நேரடியாக கடலுக்கே சென்று விடுகிறது. இப்பகுதிகளில் உள்ள சங்கரதேவன்கால்வாய், நாராயண காவிரி, கஞ்சம்பட்டி கால்வாய், மலட்டாறு, குண்டாறு, கூத்தன் கால்வாய் ஆகியவை தூர்வாரப்பட்டு வைகையில் இருந்து வரும் தண்ணீரை இந்த கால்வாய்கள் மூலம் அனைத்து கிராமங்களில் உள்ள கண்மாய்களுக்கு கொண்டு வந்தால் மழையே பெய்யாவிட்டாலும் ஒரு போக விவசாயம் விளைவதற்கு வழிவகை செய்யப்படும் என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்திருந்தார். அந்த வகையில் தற்போது முதுகுளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட கூத்தன் கால்வாய் தூர்வார ரூ. 70 லட்சம் தமிழக அரசின் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூத்தன் கால்வாய் பகுதியில் உள்ள காக்கூர், கடலாடி ஒன்றியம் கீழச்சிறுபோது, மேலச்சிறுபோது, பூலாங்குளம், சித்துடையான் வழியாக மேலச்செல்வனூர், கீழச்செல்வனூர் சரணாலயம் உள்ள கண்மாய் வரை தூர்வாரப்படுவதால் கிராமங்கள் மட்டுமல்லாமல் 20-க்கும் மேற்பட்ட கிராம கண்மாய்களுக்கும் தண்ணீர் வசதி கிடைக்கும். தற்போது கூத்தன் கால்வாய் தூர்வார முயற்சி மேற்கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதி ஒதுக்கீடு செய்த அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு அப்பகுதி விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.