''ஆசிரியர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிச்சயமாக நிறைவேற்றப்படும்'' - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
‘‘ஆசிரியர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிச்சயமாக நிறைவேற்றப்படும்’’ என்று நெல்லையில் நடந்த தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகள் வழங்கும் விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.
நெல்லை பாளையங்கோட்டை சாராள் தக்கர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகள் வழங்கும் விழா நேற்று மாலையில் நடந்தது.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள 419 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகளை பள்ளி தாளாளர்கள், முதல்வர்களிடம் வழங்கினார்.
விழாவில் சபாநாயகர் அப்பாவு பேசுகையில், ''நாட்டின் வளர்ச்சிக்கு கல்வி வளர்ச்சி முக்கியம். அண்ணா, காமராஜர், கருணாநிதி ஆகியோர் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தனர். அந்த வழியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்கல்வியை ஊக்குவிக்க புதுமைப்பெண் திட்டம் மூலம் கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்குகிறார். இதனால் பெண்களின் கல்வி வளர்ச்சி 72 சதவீதமாக உயர்ந்துள்ளது'' என்றார்.
419 பள்ளிகள்
விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தனியார் பள்ளிகள், அரசு பள்ளிகள் என்று பாகுபாடு இல்லாமல் மாணவர் சமுதாயத்தை மேம்படுத்துவதற்காகவும், புதிய சமுதாயத்தை உருவாக்கும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள் மற்றும் மாநில பாடத்திட்டம் அல்லாத பிறவாரிய பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இத்தகைய தனியார் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அங்கீகாரத்தை புதுப்பித்து ஆணை வழங்கப்படுகிறது. தற்போது 4-வது கட்டமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த 419 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகளை வழங்கி உள்ளோம்.
ஆசிரியர்களின் கோரிக்கைகள்
மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பள்ளி நிர்வாகம், கல்வி அதிகாரிகள் ஆகிய 5 பேரும் ஒன்று சேர்ந்து செயல்பட்டால், கல்வியை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்செல்ல முடியும். தனியார் பள்ளிகளின் கல்வித்தரத்தை நோக்கி அரசு பள்ளிகளும், அரசு பள்ளிகளின் சலுகைகளை நோக்கி தனியார் பள்ளிகளும் செல்ல வேண்டும்.
ஆசிரியர்கள், தனியார் பள்ளிகள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளீர்கள். ஆசிரியர்கள் மற்றும் தனியார் பள்ளிகளின் அனைத்து கோரிக்கைகளும் நிச்சயமாக பரிசீலித்து நிறைவேற்றப்படும். இவவாறு அவர் கூறினார்.
விழாவில் ஞானதிரவியம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வகாப், ரூபி மனோகரன் ஆகியோர் பேசினார்கள். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, தனியார் பள்ளிகள் இயக்குனர் நாகராஜ முருகன், நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான், மாநகர செயலாளர் சு.சுப்பிரமணியன், கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் கிரகாம்பெல், சாராள் தக்கர் மகளிர் மேல்நிலைப்பள்ளி தாளாளர் விஜிலா சத்யானந்த், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், மாநில விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், இளைஞர் அணி கருப்பசாமி கோட்டையப்பன், ராதாபுரம் தி.மு.க. இளைஞரணி நிர்வாகி விஜயாபதி ஏ.ஆர்.ரகுமான், மாவட்ட கல்வி அலுவலர் ராஜா, தலைமை ஆசிரியை செல்வலதா ரமோனா மற்றும் பலர் கலந்து கொண்டனர். நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு நன்றி கூறினார்.
பிளஸ்-2 மாணவருக்கு ஆறுதல்
பின்னர் நாங்குநேரியில் சக மாணவர்களால் வெட்டப்பட்டதில் படுகாயமடைந்து பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் பிளஸ்-2 மாணவர் சின்னத்துரை, அவருடைய தங்கையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.