இந்த வார இறுதியில் அனைத்து கட்சிகள் கூட்டம்: தலைமை தேர்தல் அதிகாரி
தேர்தல் தொடர்பான கருத்துகளை கேட்பதற்காக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் கூட்டத்தை கூட்டும்படி தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது
சென்னை,
சென்னை தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு சத்யபிரத சாகு நேற்று அளித்த பேட்டி வருமாறு:-
தமிழகம் முழுவதும் 39 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் விளவங்கோடு சட்டசபை தொகுதியில் போட்டியிடுபவர்களிடம் இருந்து வேட்புமனுக்களை பெறும் நடவடிக்கை 20-ந்தேதி (நேற்று) தொடங்கியது.
தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடிப்பதற்கான எல்லா ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்துள்ளது.தேர்தல் தொடர்பான கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை கேட்பதற்காக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் கூட்டத்தை கூட்டும்படி தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது. இந்த தகவல் அந்தந்த கட்சிகளின் தலைமைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேட்புமனு தாக்கல் செய்யும் காலகட்டம் என்பதால் இந்த வார இறுதி நாளில் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தும்படி கட்சியினர் கேட்டுக் கொண்டுள்ளனர். அதற்கான தேதி விரைவில் முடிவு செய்யப்படும். தேர்தலையொட்டி காவல்துறை தேர்தல் கமிஷன் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது.
கோவையில் 18-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி நடத்திய ரோடு ஷோ நிகழ்ச்சியில், சீருடையில் பள்ளி மாணவிகள் பங்கேற்றது தொடர்பான முதல்கட்ட விசாரணையில், பிரதமர் ரோடு ஷோ சென்ற பகுதியில்தான் சம்பந்தப்பட்ட பள்ளி உள்ளது என்றும் பிரதமர் வரும்போது குழந்தைகள் ஆர்வத்துடன் அவர்களாகவே பள்ளிக்கு வெளியே வந்து பிரதமரை பார்த்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுமையான விசாரணை அறிக்கை கிடைத்ததும் அது தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.