அனைத்து ஏ.டி.எம். மையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்
கள்ளக்குறிச்சி பகுதியில் அனைத்து ஏ.டி.எம். மையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என வங்கி மேலாளர்களுக்கு துணை போலீஸ்சூப்பிரண்டு உத்தரவிட்டார்
கள்ளக்குறிச்சி
ஆலோசனை கூட்டம்
கள்ளக்குறிச்சியில் வங்கிகள், நகைக்கடைகள், நகை அடகுக்கடைகள் ஆகியவற்றின் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் மற்றும் உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் மூர்த்தி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு பேசியதாவது:-
கண்காணிப்பு கேமரா
கள்ளக்குறிச்சி பகுதியில் வங்கி சார்பில் வைக்கப்பட்டுள்ள ஏ.டி.எம்.மையங்களில் கண்டிப்பாக அதிநவீன கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். யாரேனும் ஏ.டி.எம். எந்திரத்தை சேதப்படுத்தினால் உடனடியாக வங்கி மேலாளர் மற்றும் போலீஸ் நிலையங்களுக்கு குறுஞ்செய்தி செல்லுமாறு மென்பொருள் பொருத்த வேண்டும். ஏ.டி.எம்.மையத்தில் இரவு நேரங்களில் பாதுகாப்புக்காக காவலாளியை நியமிக்க வேண்டும். ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தையோ அல்லது தமிழக காவல்துறையால் உருவாக்கப்பட்ட காவல் செயலியையோ பயன்படுத்த வேண்டும்.
சந்தேகநபர்கள்
வங்கிக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களில் யாரேனும் சந்தேகப்படும்படியாக இருந்தால் உடனே போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதேபோல் நகைக்கடையில் அடகுக்கடையில் அவசியம் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் வங்கி மேலாளர்கள், நகைக்கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.