அட்சய திருதியை: தங்கம் விலை இன்று ஒரே நாளில் 3-வது முறையாக உயர்வு
தங்கம் விலை இன்று ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு ரூ.1,240 அதிகரித்துள்ளது.
சென்னை,
சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திருதியை, அட்சய திருதியை என்று போற்றப்படுகிறது. அட்சயம் என்றால் அள்ள அள்ள குறையாத அல்லது தேயாத என்று பொருள். அனைத்து நலன்களையும் அள்ளித் தரும் நாளாக, அட்சய திருதியை இருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. இந்துக்களும் ஜைனர்களும் இந்த நாளை மிக புனிதமான நாளாக கொண்டாடுகின்றனர்.
இந்த ஆண்டு அட்சய திருதியை திதி இன்று (மே 10) காலை 4.17 மணிக்கு தொடங்கி நாளை (மே 11) மதியம் 2:50 மணிக்கு முடிவடைகிறது. இந்த நாளில் வாங்கப்படும் எந்த பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவேதான் இந்த நாளில் மதிப்புமிக்க தங்கத்தை வாங்குவதற்கு விரும்புகின்றனர்.
அட்சய திருதியை தினமான இன்று காலையிலேயே இரண்டு முறை தங்கம் விலை உயர்ந்தது. காலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்த நிலையில், சிறிது நேரத்தில் மீண்டும் ரூ.360 அதிகரித்து உயர்ந்து ரூ.53,640-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு இருமுறை தலா ரூ.45 உயர்ந்து ரூ.6,705-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில், சென்னையில் இன்று ஒரே நாளில் 3-வது முறையாக தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, தங்கம் விலை மீண்டும் சவரனுக்கு ரூ.520 அதிகரித்து 54,160க்கும், கிராமுக்கு ரூ.65 உயர்ந்து 6,770க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை மீண்டும் கிராமுக்கு 1.20 உயர்ந்து 91.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இன்று ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு ரூ.1,240 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.