சென்னை அம்பத்தூரில் ஏ.சி. எந்திரம் தீப்பிடித்து எரிந்து தாய்-மகள் மூச்சுத்திணறிச்சாவு


சென்னை அம்பத்தூரில் ஏ.சி. எந்திரம் தீப்பிடித்து எரிந்து தாய்-மகள் மூச்சுத்திணறிச்சாவு
x
தினத்தந்தி 1 Oct 2023 3:15 AM IST (Updated: 1 Oct 2023 3:15 AM IST)
t-max-icont-min-icon

சென்னை அம்பத்தூரில் மின்சிவு காரணமாக ஏ.சி. எந்திரம் தீப்பிடித்து எரிந்ததில் புகை மூட்டத்தால் மூச்சுத்திணறி தாய்-மகள் இருவரும் பரிதாபமாக இறந்தனர்.

தாய்-மகள்

சென்னை அம்பத்தூர் மேனாம்பேடு, ஏகாம்பரம் நகர், கைலாசம் தெருவை சேர்ந்தவர் அகிலாபேகம் (வயது 50). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். 2 வருடங்களுக்கு முன்பு அவருடைய கணவர் உயிரிழந்து விட்டார். மகள் நஸ்ரின் பேகத்துடன் (16) அந்த வீட்டில் அகிலாபேகம் தனியாக வசித்து வந்தார். நஸ்ரின் பேகம், அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு தாய்-மகள் இருவரும் சாப்பிட்டு விட்டு வழக்கம் போல் வீட்டின் படுக்கை அறைக்குள் சென்று ஏ.சி. எந்திரத்தை போட்டுக்கொண்டு தூங்கி விட்டனர்.

பிணமாக கிடந்தனர்

நேற்று காலை 6 மணியளவில் அவரது வீட்டில் இருந்து கரும்புகை கிளம்பியது. அருகே மளிகை கடை வைத்திருக்கும் தனக்கோட்டி என்பவர் அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.

வீடு முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. படுக்கை அறையில் அகிலா பேகம், அவருடைய மகள் நஸ்ரின் பேகம் இருவரும் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தனர். சுற்றிலும் தீ எரிந்தது.

ஏ.சி. எந்திரத்தில் தீ

இதுபற்றி தகவல் அறிந்து வந்த அம்பத்தூர் எஸ்டேட் தீயணைப்பு துறை அலுவலர் இளங்கோவன், செங்குன்றம் அலுவலர் குமாரவேல் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அறையில் எரிந்த தீயை அணைத்தனர்.

பலியான தாய்-மகள் இருவரது உடல்களையும் அம்பத்தூர் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்கும் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

மின்கசிவு காரணமாக படுக்கை அறையில் பொருத்தப்பட்டு இருந்த ஏ.சி. எந்திரம் தீப்பிடித்து அறை முழுவதும் தீ பரவி இருக்கிறது. இதனால் ஏற்பட்ட புகை மூட்டத்தால் அங்கு அயர்ந்து தூங்கி கொண்டிருந்த தாய்-மகள் இருவரும் மூச்சுத்திணறியதுடன், உடல் கருகியும் இறந்து இருக்கிறார்கள் என்பது தெரியவந்து இருக்கிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story