மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு அதிமுக ஆதரவு - எடப்பாடி பழனிசாமி


மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு அதிமுக ஆதரவு - எடப்பாடி பழனிசாமி
x

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு அதிமுக ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருந்து புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று இடம்பெயர்ந்தது. புதிய நாடாளுமன்றத்தின் முதல் அலுவலாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மத்திய சட்ட மந்திரி அர்ஜுன்ராம் மேக்வால், மசோதாவை தாக்கல் செய்தார்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா, 15 ஆண்டுகளுக்கு மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்கிறது. பெண்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு உள்ஒதுக்கீடு அளிக்கப்படும்.

இந்த நிலையில், மகளிருக்கு இட ஒதுக்கீடு மசோதாவுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

"பெண்களைப் பாதுகாப்பது மற்றும் அவர்களது பொருளாதாரத்தை மேம்படுத்துவது மட்டும் உண்மையான பெண் சுதந்திரம் ஆகாது. நாட்டை வழி நடத்துவதிலே பெண்களுக்கு உரிய பங்கு வழங்கப்பட வேண்டும்" என்ற கருத்தை முன்வைத்து தமிழகத்தில் உள்ளாட்சி பதவிகளில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடும் பின்னர் அதையே 2016ல் 50% இடஒதுக்கீடாக உயர்த்தி வழங்கி பெண் இனத்திற்கே பெருமை சேர்த்தவர் மாண்புமிகு அம்மா ஜெயலலிதா அவர்கள் தான்,

அதேபோல் 1991ல் முதன்முதலாக ஆட்சி அமைத்த போதுதான் 31பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மா அவர்களுடன் தமிழக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர், மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் இந்தியாவிற்கே முன்னோடியாக திகழ்ந்தது அஇஅதிமுக மட்டும் தான் என்பதில் பெருமை கொள்வதோடு, அதனை முன்மாதிரியாக கொண்டு நாடாளுமன்றத்தில் இந்தியா முழுவதற்கும் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரவேற்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story