அதிமுக பொதுச்செயலாளர் ஆனார் எடப்பாடி பழனிசாமி; ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி


அதிமுக பொதுச்செயலாளர் ஆனார் எடப்பாடி பழனிசாமி; ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி
x

அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்த நிலையில், எடப்பாடி பழனிசாமி நேற்று கட்சியின் பொதுச்செயலாளர் ஆனார். ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தாக்கல் செய்த மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க. வில் பல அதிரடி நிகழ்வுகள் அரங்கேறின.

கட்சியை நிர்வகிக்க ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நாளடைவில் இந்த இரட்டை தலைமை மீது அதிருப்தி ஏற்பட்டதால் ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கை கட்சியில் ஓங்கி ஒலிக்க தொடங்கியது.

அ.தி.மு.க. பொதுக்குழு

இதற்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கட்சிக்குள் பல பிரச்சினைகள் ஏற்பட்டது. இதற்கிடையே அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் கடந்த ஆண்டு ஜூலை 11-ந் தேதி சென்னை வானகரத்தில் நடந்தது.

இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்குவது, எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்வது உள்பட பல தீர்மானங்கள் இயற்றப்பட்டன.

பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிர்ப்பு

இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பு கடந்த 17-ந் தேதி வெளியிடப்பட்டது.

இதில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த தேர்தலை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி கே.குமரேஷ்பாபு, பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை கேட்டு தாக்கல் செய்த இடைக்கால மனுக்கள் மீதும் முதலில் விசாரிப்பதாகவும், பிரதான வழக்குகளை பின்னர் விசாரிப்பதாகவும் உத்தரவிட்டார். மேலும் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தலாம். ஆனால், முடிவுகளை வெளியிடக்கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதனையடுத்து அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றன. இடைக்கால மனுக்கள் மீது விசாரணை நடத்திய நீதிபதி கே.குமரேஷ்பாபு நேற்று தீர்ப்பு அளித்தார்.

நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

தீர்மானங்கள் செல்லும்

அ.தி.மு.க. கட்சி விதி 43-ன் படி, விதியை உருவாக்கவும், ஏற்கனவே உள்ள விதியை ரத்து செய்யவும் பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது. மனுதாரர்களும் இதை மறுக்கவில்லை. மொத்தம் 2,665 பொதுக்குழு உறுப்பினர்களில் 2,190 பேர் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

அதன்படி, ஜூலை 11-ந் தேதி நடந்த பொதுக்குழுவில், 2,460 உறுப்பினர்கள் கலந்துகொண்டு, அனைத்து தீர்மானங்களையும் ஆதரித்து ஓட்டு போட்டுள்ளனர்.

எனவே, பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லத்தக்கதுதான்.

ஒப்புதல் இல்லை

பொதுக்குழு கூட்டத்தை கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்தான் கூட்ட அதிகாரம் உண்டு என்று மனுதாரர்கள் கூறுவதை ஏற்க முடியாது. ஏன் என்றால், கட்சி விதி 20ஏ (7)-ன்படி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாக இருக்கும்போது, அவர்களால் நியமிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள் கட்சியை நிர்வகிக்க முடியும்.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கி 2021-ம் ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி நடந்த செயற்குழு கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்துக்கு, 2022-ம் ஆண்டு ஜூன் 23-ந் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே, இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலியாக உள்ளது என்று எதிர்மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

விளக்கம் கேட்கவில்லை

அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், ஒருங்கிணைப்பாளரால் தன்னிச்சையாக பொதுக்குழுவை கூட்ட முடியாது. எனவே, ஜூலை 11-ந் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்த ஜூலை 1-ந் தேதி அறிவிப்பு வெளியிட்டதில் எந்த தவறும் இல்லை என்று முடிவு செய்கிறேன். இப்போது, பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்தவில்லை என்றால், கட்சியின் தலைமையில் வெற்று இடம் உருவாகும்.

அதை நிரப்ப அப்பதவிக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக ஒரு கமிட்டியை உருவாக்கி இயற்றப்பட்ட தீர்மானமும் சரிதான்.

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்குவதற்கு முன்பு அதுகுறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுத்து இருக்க வேண்டும். அப்போது குற்றச்சாட்டுக்கு அவர்கள் விளக்கம் அளிக்க முடியும். ஆனால், அவ்வாறு செய்யாமல், உள்கட்சி தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடக்கூடாது என்பதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இந்த தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

பிரதான வழக்கு

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமி தரப்பு, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கடந்த ஜூலை 11-ந் தேதி கட்சி அலுவலகத்தையே சூறையாடி விட்டனர். அலுவலகத்தை பூட்டி சாவியை எடுத்து சென்று விட்டனர். எனவே, அவர்களை கட்சியை விட்டு நீக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது என்று வாதிடப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து, பிரதான வழக்குகளின் விசாரணையின்போது, பரிசீலித்துக்கொள்ளலாம்.

முகாந்திரம் உள்ளது

ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு 7 நாட்களுக்கு முன்பு சம்பந்தப்பட்டவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று கட்சி விதி 6 கூறியுள்ளது. இந்த வழக்கில், இந்த விதி மீறப்பட்டு உள்ளது. எனவே, விளக்கம் கேட்காமல் கட்சியில் இருந்து நீக்கி விட்டனர் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சுமத்தும் இந்த குற்றச்சாட்டுக்கும் முகாந்திரம் உள்ளது.

ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் எம்.எல்.ஏ.க்களாக இருப்பதால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அவர்களை நீக்கினால், அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களது தொகுதி மக்களுக்கும் பாதிப்பு வரும் என்று வாதிடப்பட்டது.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாதகம்

இந்த வாதம் மனுதாரர்கள் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு சாதகமாக உள்ளது. அதேநேரம், இதன் அடிப்படையில் ஏதாவது ஒரு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தால், அது கண்டிப்பாக அ.தி.மு.க.வு.க்கு ஈடு செய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, சிறப்பு தீர்மானங்களுக்கு தடை கேட்ட கோரிக்கையையும் நிராகரிக்கிறேன்.

இப்படி ஒரு நிலைபாட்டை எடுத்த பின்னர், பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலுக்கு தடை விதித்தால், தலைமை இல்லாமல், கட்சிக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். கட்சி செயல்பாட்டுக்கு மட்டுமல்ல கட்சியில் உள்ள 1.55 கோடி தொண்டர்களுக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

தள்ளுபடி

எனவே, பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை கேட்டு தொடரப்பட்ட இடைக்கால மனுக்களை தள்ளுபடி செய்கிறேன்.

இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

தேர்தல் முடிவு

ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து, அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடுவதில் இருந்த சிக்கல் தீர்ந்தது.

எனவே தீர்ப்பு வெளியான சில நிமிடங்களிலேயே சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடுவதற்கு உட்கட்சியின் தேர்தல் நடத்தும் ஆணையாளர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் தயார் ஆனார்கள்.

இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு வந்தார். முதலில் அலுவலகத்தின் நுழைவுவாயில் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளை வணங்கி, மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அலுவலகத்துக்குள் வந்தார். அதனைத்தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வெளியிட்டனர்.

பொதுச்செயலாளர் ஆனார்

அதில், எடப்பாடி பழனிசாமியை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்படுகிறார் என்று அறிவித்தனர். பின்னர், அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான வெற்றி சான்றிதழை நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினார்கள்.

உடனே அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, டாக்டர் சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், வளர்மதி, தங்கமணி மற்றும் தொண்டர்கள் பலரும் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

சோதனைகளுக்கு இடையே...

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை வணங்கி, பல்வேறு சோதனைகளுக்கு இடையே இரு பெரும் தலைவர்களின் கனவை நனவாக்கும் விதமாக, அ.தி.மு.க. தொண்டர்களால் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் போட்டியிட்டு, தேர்தலுக்காக நியமிக்கப்பட்ட தேர்தல் அலுவலர்கள் பொதுச்செயலாளராக என்னை அறிவித்து இருக்கிறார்கள்.

இதற்காக அ.தி.மு.க. அனைத்து தொண்டர்கள், நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த நன்றியை சமர்ப்பிக்கிறேன். தேர்தல் நடத்தும் ஆணையாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதில் இருந்து பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜெயலலிதா நினைவிடம்

கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்தை ஏற்றுக்கொண்ட அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அங்கிருந்து பின்னர் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களுக்கு சென்றார்.

அங்கு நினைவிடங்களை தொட்டு வணங்கிய அவர், பின்னர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றதை தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் நேற்று பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.


Next Story