அதிமுக தலைமை அலுவலக மோதல்: ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இன்று ஆஜர்
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மோதல் தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் 45 பேரை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ராயப்பேட்டை போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
சென்னை,
சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கடந்த 11-ந் தேதி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. அ.தி.மு.க. அலுவலகத்திற்குள் கதவை உடைத்து தனது ஆதரவாளர்களுடன் ஒ.பன்னீர்செல்வம் நுழைந்தார்.
இருதரப்பினர் இடையே மீண்டும் மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டதால், வருவாய் துறை அதிகாரிகள் அ.தி.மு.க. அலுவலகத்துக்கு 'சீல்' வைத்தனர். மேலும் இதுதொடர்பாக ராயப்பேட்டை போலீசார் 3 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். 14 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மோதலின்போது பயங்கர ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வீடியோ ஆதாரம் மூலம் அடையாளம் கண்டனர். அதன்படி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 45 பேருக்கு போலீசார் நேற்று சம்மன் அனுப்பி உள்ளனர்.
அதன்படி, அதிமுக தலைமை அலுவலக மோதல் வழக்கு விசாரணை தொடர்பாக சென்னை, ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை), காலை 11 மணிக்கு நேரில் ஆஜராக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களை நாளை(புதன்கிழமை) ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.