விவசாய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
அரகண்டநல்லூரில் விவசாய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருக்கோவிலூர்,
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் அரகண்டநல்லூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு வட்ட தலைவர் எம்.செல்வராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, வட்ட செயலாளர் ஏழுமலை, வட்ட பொருளாளர் பாபு, மாவட்ட துணை செயலாளர் சவுரியம்மாள், வட்ட துணை செயலாளர் வீரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில பொருளாளர் பழனி கலந்து கொண்டு பேசினார். அரகண்டநல்லூர் பேரூராட்சி பகுதியில் சுமார் 80 சதவீதம் விவசாய கூலி தொழிலாளர்கள் வேலை இன்றி உள்ளனர். இதனால் அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க பேரூராட்சிபகுதியில் உள்ள கால்வாய்கள், தென்பெண்ணையாறு மற்றும் அதனை சுற்றியுள்ள ஓடைகளை தேசிய ஊரக வேலைஉறுதியளிப்பு திட்டத்தின் கீழ் தூர்வாரி சீரமைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். மேலும் இந்த பணியில் வேலையில்லாமல் உள்ள தொழிலாளர்களை ஈடுபடுத்த வேண்டும் என கூறி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கோஷங்களை எழுப்பினர். இது குறித்த தகவலின் பேரில் கண்டாச்சிபுரம் தாசில்தார் கற்பகம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பேரூராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராயல் எஸ்.அன்பு மற்றும் போராட்டகுழுவினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் போராட்ட குழுவினரின் கோரிக்கை குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்று போராட்டத்தை கைவிட்டு விட்டு அங்கிருந்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கலைந்து சென்றனர்.