'ஹெல்மெட்' அணியாத வாகன ஓட்டிகளிடம் உறுதிமொழி பத்திரம்


ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளிடம் உறுதிமொழி பத்திரம்
x

சென்னையில் ‘ஹெல்மெட்' அணியாத வாகன ஓட்டிகளிடம் உறுதிமொழி பத்திரம் வாங்கும் புதிய விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தை சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நேற்று தொடங்கி வைத்தார்.

சென்னை

சென்னை,

சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் கடுமையாக அபராத தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மது போதையில் வாகன ஓட்டுபவர்களிடம் ரூ.10 ஆயிரம் அபராத தொகை வசூலிக்கப்படுகிறது. தற்போது அபராத தொகையை வசூலிப்பதில் காட்டும் வேகத்தைவிட, விழிப்புணர்வு பிரசாரத்தின் வேகத்தை அதிகரிக்கும்படி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.

அதனடிப்படையில் விழிப்புணர்வு பிரசாரம் நேற்று முதல் தீவிரமாக தொடங்கப்பட்டது. வருகிற 31-ந்தேதி வரையில் மெரினா உழைப்பாளர் சிலை சந்திப்பு, மயிலாப்பூர் லஸ் சந்திப்பு, நந்தனம் சிக்னல் சந்திப்பு, சென்டிரல் லைட் பாயிண்ட் சந்திப்பு, அண்ணா நகர் ரவுண்டானா சந்திப்பு ஆகிய இடங்களில் இந்த விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற இருக்கிறது.

சாலை பாதுகாப்பு விதிமுறைகள் பற்றி நன்கு பயிற்சி பெற்ற 120 பள்ளி மாணவ-மாணவிகள் இந்த பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.

இந்த புதிய விழிப்புணர்வு பிரசாரத்தின் தொடக்க விழா, சென்னை வேப்பேரி ஈ.வெ.ரா. சாலை, ஈ.வி.கே.சம்பத் சாலை சந்திப்பில் நேற்று காலை நடைபெற்றது. இதில், சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் கலந்துகொண்டு இந்த விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்தார். அப்போது வண்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டன.

இந்த விழா நடைபெற்ற போது, அந்த வழியாக 'ஹெல்மெட்' அணியாமல் வந்த இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவச 'ஹெல்மெட்' வழங்கப்பட்டது. 'இனிமேல் ஹெல்மெட் அணிவேன்' என்ற உறுதிமொழி பத்திரம் அவர்களிடம் எழுதி வாங்கப்பட்டது. பின்னால் அமர்ந்து 'ஹெல்மெட்' அணியாமல் வந்த பெண்கள் உள்ளிட்டோருக்கும் இலவச 'ஹெல்மெட்' கிடைத்தது.

அப்போது வாக ஓட்டிகளிடம் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளுக்கு போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நற்சான்றிதழ் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் கபில்குமார் சி ஷரத்கர், இணை கமிஷனர் மயில் வாகனன், உதவி கமிஷனர் கிறிஸ்டோபர், இன்ஸ்பெக்டர்கள் பாண்டிவேலு, டேனியல் ராஜ் உள்ளிட்டோரும், போக்குவரத்து போலீஸ் வார்டன்களும் கலந்துகொண்டனர்.


Next Story