மழைநீர் வடிகால் தொடர்பாக அ.தி.மு.க. குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருக்கிறதா? கே.என்.நேரு கேள்வி


மழைநீர் வடிகால் தொடர்பாக அ.தி.மு.க. குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருக்கிறதா? கே.என்.நேரு கேள்வி
x

ஹலோ எப்.எம்.மில் இன்று காலை 10 மணிக்கு ஒலிபரப்பாக உள்ள ஸ்பாட்லைட் நிகழ்ச்சியில், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு சென்னையில் நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் பணிகள் குறித்து பேசினார்.

அதில் அவர் கூறியதாவது:-

சென்னையின் வரைபடம் கூட முழுமையாக இல்லாத நிலையில் ஒய்வுபெற்ற அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னையில் கடந்த முறை மழை நீர் தேங்கி இருந்த பெரும்பாலான இடங்களில் இந்த முறை மழை நீர் தேங்கவில்லை என்று பொதுமக்களே தெரிவித்துள்ளனர். அடுத்த ஆண்டு சென்னையில் எந்த பகுதியிலும் மழை நீர் தேங்காத அளவுக்கு நடவடிக்கைகள் இருக்கும்.

மழை நீர் வடிகால் பணிகள் குறித்து அ.தி.மு.க.வினர் எந்த அடிப்படையில் குற்றம் சாட்டுகிறார்கள்? அவர்களிடம் ஆதாரம் இருக்கிறதா? தமிழகத்தில் கால் ஊன்ற பா.ஜ.க. தீவிர முயற்சி எடுத்து வருகிறது. மாற்று கட்சிகளில் இருந்து ஓரம் கட்டப்பட்டவர்களையும், அவர்கள் கட்சியில் சேர்த்து வருகிறார்கள். தங்கள் இருப்பை காட்டிக்கொள்ள தி.மு.க.வின் திராவிட மாடல் குறித்து பேசி வருகிறார்கள். முதல்-மந்திரிகள் அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி ஆகியோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தது, நட்பின் அடிப்படையிலானது. இதில் அரசியல் இல்லை என்று முதல்-அமைச்சரே கூறியிருக்கிறார்.

இவ்வாறு கே.என்.நேரு கூறினார்.

இதேபோல, கவர்னருக்கு எதிராக தி.மு.க.வின் நடவடிக்கைகள், சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்த கேள்விகளுக்கும் கே.என்.நேரு பதில் அளித்துள்ளார்.


Next Story