அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்தி வைக்கிறது
அ.தி.மு.க. ஆட்சியின் போது அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்தி வைக்கிறது என்று கோவையில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
கோவை
அ.தி.மு.க. ஆட்சியின் போது அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்தி வைக்கிறது என்று கோவையில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
அ.தி.மு.க. நிர்வாகி இல்ல விழா
கோவை புறநகர் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் செந்தில் கார்த்திகேயன்-கிருபாலினி தம்பதியினரின் மகள் மதுமிதாவின் பூப்புனித நீராட்டு விழா கோவை சின்னையம்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மதுமிதாவை வாழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. கொறடா எஸ்.பி.வேலுமணி, முன்னாள் அமைச்சர் தங்கமணி, முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ச்சுனன், ஏ.கே.செல்வராஜ், தாமோதரன், கே.ஆர்.ஜெயராமன், வி.பி.கந்தசாமி, அமுல் கந்தசாமி, முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, என்ஜினீயர் சந்திரசேகர், ஷர்மிளா சந்திரசேகர், வால்பாறை அமீது, விஜய்குமார், மகேஷ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வளர்ச்சி திட்டங்கள்
இதன்பின்னர் சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையத்திற்கு எடப்பாடி பழனிசாமி வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அ.தி.மு.க. ஆட்சியின் போது கோவை மாநகராட்சியில் ரூ.150 கோடியில் 500 வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதனை தற்போதைய தி.மு.க. அரசு ரத்து செய்து உள்ளது. மேலும் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ரூ.44 கோடியில் 133 பணிக்கான டெண்டர் 13 முறை விடப்பட்டும் யாரும் அதனை எடுக்க முன்வரவில்லை. தி.மு.க.வினர் 18 சதவீதம் வரை கமிஷன் கேட்பதால் இந்த டெண்டரை யாரும் எடுக்க முன்வரவில்லை.
வெள்ளலூர் பஸ் நிலையம்
அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.168 கோடியில் வெள்ளலூர் பஸ் நிலையம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. தற்போது அதன் கட்டுமான பணி 50 சதவீதம் நிறைவடைந்த நிலையில் அதனை கைவிட்டு வேறு இடத்தில் பஸ் நிலையம் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. எனவே வெள்ளலூர் பஸ் நிலையத்தை இட மாற்றினால் தொடர் உண்ணாவிரத போராட்டங்கள் நடத்தப்படும். அ.தி.மு.க. ஆட்சியில் அறிவித்த மெட்ரோ ரெயில் திட்டம், ஸ்மார்ட் திட்ட பணிகள், அத்திக்கடவு-அவினாசி திட்டம், ஆனைமலை-நல்லாறு திட்டம், மேற்கு புறவழிச்சாலை திட்டம், பில்லூர் 3-வது குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை 4 மாதங்களுக்கு முன்பே நிறைவேற்றப்பட்டு இருக்க வேண்டும். இந்த திட்டத்தை நிறைவேற்றாததால் பவானிசாகர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் கடலில் கலந்து வருகிறது. ஏற்கனவே சொத்து வரி 100 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. தற்போது மின் கட்டணத்தை உயர்த்தி அறிவித்து உள்ளது. கடுமையாக மக்கள் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் மக்கள் தலையில் அரசு சுமையை வைத்து உள்ளது.
சமையல் கியாஸ் சிலிண்டர் மானியம்
தி.மு.க. அரசு சமையல் கியாஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, முதியோர் ஓய்வூதியம் அதிகரிப்பு, இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை என பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டனர். இதனை அவர்கள் இதுவரை நிறைவேற்றவில்லை. இந்த ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து இதுவரை 38 குழுக்களை அமைத்து உள்ளது. இந்த குழுக்கள் அனைத்தும் எப்படி செயல்படுகிறது என்பதை அறிய அதற்கும் ஒரு குழு அமைப்பார்கள்.
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் டன் கணக்கில் போதைப்பொருள் பிடிபடுகிறது. போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக தமிழகம் காட்சி அளிக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது. இதுபோல் உலகத்தில் எங்கும் நடக்கவில்லை. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக சென்னையில் இருந்து கோவை வந்த எடப்பாடி பழனிசாமிக்கு விமான நிலையத்தில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் விமான நிலையம் முதல் நிகழ்ச்சி நடைபெறும் மண்டபம் வரை சாலையோரம் ஏராளமான தொண்டர்கள் திரண்டு எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளித்தனர்.