அரசு கலைக்கல்லூரியில் பி.காம்., பி.பி.ஏ., பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை


அரசு கலைக்கல்லூரியில் பி.காம்., பி.பி.ஏ., பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை
x

கரூர் அரசு கலைக்கல்லூரியில் பி.காம்., பி.பி.ஏ., பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று நடைபெற்றது.

கரூர்

அரசு கலைக்கல்லூரி

கரூர் அரசு கலைக் கல்லூரியில் 2023-24-ம் கல்வியாண்டிற்கான இளநிலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கைகான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இக்கல்லூரியில் 1,280 இடங்களுக்கு 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். இதனையடுத்து கரூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த 30-ந்தேதி தொடங்கியது.

அன்று சிறப்பு ஒதுக்கீட்டின் அடிப்படையில் அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், தேசிய மாணவர் படை, விளையாட்டு பிரிவு, மாணவ, மாணவிகள் மற்றும் அந்தமான் நிக்கோபார் மாணவர்கள் ஆகியோருக்கான கலந்தாய்வு நடைபெற்றது.

கலந்தாய்வு

கடந்த 2-ந்தேதி இளங்கலை தமிழ் மற்றும் ஆங்கில பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. இந்நிலையில் கரூர் அரசு கலைக்கல்லூரியில் நேற்று பி.காம்., பி.காம். சி.ஏ., பி.பி.ஏ. பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) அலெக்சாண்டர் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் பி.காம். (ஷிப்ட் 1) பாடப்பிரிவுக்கு 60 இடங்களுக்கு 1,157 மாணவ, மாணவிகளும், பி.காம். (ஷிப்ட் 2) பாடப்பிரிவுக்கு 60 இடங்களுக்கு 1,030 மாணவ, மாணவிகளும், பி.காம். சி.ஏ., பாடப்பிரிவுக்கு 60 இடங்களுக்கு 1,540 மாணவ, மாணவிகளும், பி.பி.ஏ., பாடப்பிரிவுக்கு 60 இடங்களுக்கு 1,226 மாணவ, மாணவிகளும் விண்ணப்பித்திருந்தனர்.

சான்றிதழ் சரிபார்ப்பு

இந்த கலந்தாய்வில் பி.காம்., பி.காம். சி.ஏ., பி.பி.ஏ. பாடப்பிரிவு மாணவர்களுக்கு தனித்தனியாக கலந்தாய்வு நடைபெற்றது. கலந்தாய்விற்கு வந்திருந்த மாணவ, மாணவிகளின் கல்வி சான்றிதழ்கள் பேராசிரியர்களால் சரிபார்க்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது.

இன்று (செவ்வாய்க்கிழமை) இளங்கலை வரலாறு மற்றும் பொருளியல் பாடப்பிரிவுகளுக்கும், நாளை (புதன்கிழமை) இளம்அறிவியல் இயற்பியல், வேதியியல், கணிதம், புள்ளியியல், கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவிற்கும், 8-ந்தேதி இளம் அறிவியல் விலங்கியல், தாவரவியல், புவியியல், புவிஅமைப்பியல், ஊட்டச்சத்து மற்றும் உணவு முறைகள் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.


Next Story