ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்


ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
x

இந்திய தொழில்நுட்பக் கழகம் மற்றும் தாட்கோ மூலம் செயல்படுத்தப்பட உள்ள தொழில் பாதை திட்டத்தில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

தர்மபுரி

தகுதி தேர்வு

இதுதொடர்பாக தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பிளஸ்-2 வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு இந்திய தொழில் நுட்பக் கழகம் மற்றும் தாட்கோ நிறுவனம் ஆகியவை இணைந்து தொழில் பாதை திட்டத்தை செயல்படுத்த உள்ளன. இதன்படி சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் உலகிலேயே முதல்முறையாக இளங்கலை தரவு அறிவியல் மற்றும் மின்னணு அமைப்புகள் பட்டப்படிப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதில் பிளஸ்-2 வகுப்பு அல்லது அதற்கு இணையான டிப்ளமோ படிப்பை முடித்த மாணவர்கள் விண்ணப்பித்து 4 ஆண்டு பட்டப்படிப்பை படிக்கலாம். மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் வரவேற்கப்படுகிறது. இந்த படிப்பில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகள் இந்திய தொழில்நுட்பக் கழகம் மூலம் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் பங்கு பெறத் தேவையில்லை. அதற்கு பதிலாக பிளஸ்-2 வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பை முடித்த மாணவர்களுக்கு அளிக்கப்படும் 4 வார பயிற்சி முடிவில் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதுமானது.

கல்வி உதவித்தொகை

இந்த திட்டத்தில் படிக்க அனைத்து பாடப்பிரிவு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். இந்த வகுப்புகள் இணையதளம் மூலமாக நடத்தப்படும். மாணவர்கள் ஒரே நேரத்தில் தங்கள் விருப்ப படிப்பை படித்துக் கொண்டே இந்த திட்டத்தில் ஏதேனும் ஒரு பட்டப் படிப்பை படிக்கலாம். இந்தத் திட்டத்தில் சேர பிளஸ்-2 வகுப்பில் 60 சதவீத மதிப்பெண்ணுக்கு மேல் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்திய தொழில்நுட்பக் கழகம் நடத்தும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்கும் மாணவர்களுக்கு தாட்கோ மூலம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

இந்திய தொழில் நுட்பக் கழகம் நடத்தும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் இளங்கலை டேட்டா சயின்ஸ் அப்ளிகேஷன் மற்றும் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் பட்டப்படிப்பு சேர்க்கை பெறுவார்கள்.

இந்த படிப்பிற்கான செலவு தொகை தாட்கோவால் வழங்கப்படும். எனவே இந்த திட்டத்தில் சேர்ந்து பயன் பெற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு தர்மபுரி சாலை விநாயகர் சாலையில் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story