சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு உரிய நிதி வழங்கிட வேண்டும் - அமைச்சர் தங்கம் தென்னரசு


சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு உரிய நிதி வழங்கிட வேண்டும் -  அமைச்சர் தங்கம் தென்னரசு
x

சென்னை மெட்ரோ ரெயிலின் 2-வது கட்ட திட்டத்தினை, மத்திய அரசின் திட்டமாக அங்கீகரித்து ரூ.7,425 கோடியை வழங்கிட வேண்டும்.

சென்னை,

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கோவையில் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், சென்னை மெட்ரோ ரெயில்-2-ம் கட்ட திட்டத்துக்கு ரூ.21 ஆயிரம் கோடி கடனுதவியை மத்திய அரசு பெற்றுத்தந்தது. அதில் ரூ.5,880 கோடி மட்டுமே தமிழ்நாடு அரசு செலவு செய்துள்ளது என்று கூறியிருந்தார்.

இதற்கு தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய நிதி மந்திரி சென்னை மெட்ரோ ரெயில் -2-ம்கட்டம், மாநில அரசின் திட்டமாக நடைமுறைப்படுத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். இது குறித்த சரியான விவரத்தை அவருக்கு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். 2017-ம் ஆண்டு இந்த திட்டத்தை ஒரு மத்திய அரசின் திட்டமாகவே நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசால் பரிந்துரை செய்யப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.

பின்னர் ஜப்பான் நாட்டின் நிதி வழங்கும் 'ஜைகா 'நிறுவனம் 2018-ம் ஆண்டு இத்திட்டத்தினை விரைந்து தொடங்க கடன் ஒப்பந்தத்தை உடனடியாக கையெழுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. அதனடிப்படையில், ஏற்கனவே மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட திட்ட அறிக்கை மத்திய அரசின் பரிசீலனையில் இருந்ததால், கடன் ஒப்பந்தத்தை குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் இறுதி செய்யவேண்டிய சூழ்நிலையில், இத்திட்டத்தினை மத்திய அரசின் திட்டம் எனும் ஒப்புதலை எதிர்நோக்கி, காலதாமதத்தை தவிர்க்கும் நோக்கிலும் பொதுமக்கள் நலன் கருதியும் தமிழ்நாடு அரசே இம்மாபெரும் திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கியது.

இந்த வழிமுறையை மத்திய அரசும் ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் 17.8.2021 அன்று நடைபெற்ற பொது முதலீட்டு குழுவின் கூட்டத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, இத்திட்டம் மத்திய அரசின் திட்டமாகவே செயல்படுத்த மத்திய மந்திரி சபைக்கு முன்மொழிந்தது என்பதை நிதி மந்திரியின் கவனத்திற்கு கொண்டுவர விழைகிறேன்.

நிதி மந்திரியை நாங்கள் கேட்டுக் கொள்வதெல்லாம் மத்திய அரசின் பொது முதலீட்டுக் குழு பரிந்துரைத்தபடி சென்னை மெட்ரோ ரெயிலின் 2-வது கட்ட திட்டத்தினை, மத்திய அரசின் திட்டமாக அங்கீகரித்து மத்திய அரசின் பங்கான ரூ.7,425 கோடியை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பதேயாகும்.

மேலும் நிதி மந்திரி ரூ.21 ஆயிரம் கோடி வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் கடன்களாக ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ள போதிலும் தமிழ்நாடு அரசு ரூ.5,880 கோடி மட்டுமே செலவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். உண்மையில் இதுவரை இத்திட்டத்திற்காக ரூ.18,564 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு அரசு இதுவரை தனது சொந்த நிதியிலிருந்து செலவிட்டுள்ள தொகை ரூ.11,762 கோடியாகும்.

வெளிநாட்டு நிதி நிறுவனங்களிடம் இருந்து பெற்ற கடன் மூலமாக மேற்கொள்ளப்பட்ட செலவு ரூ.6,802 கோடியாகும். ஆனால் மத்திய அரசின் பங்கான பொது முதலீட்டுக் குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட பங்கான ரூ.7,425 கோடியில் ஒரு ரூபாய் கூட மத்திய அரசால் இன்னும் விடுவிக்கப்படவில்லை.

ரூ.7,425 கோடி நிதியை மத்திய அரசு வழங்கிட வேண்டும். இத்திட்டத்தை மத்திய அரசின் திட்டமாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் தமிழ்நாடு அரசின் கடன் சுமையைக் குறைத்திட வழிவகை செய்திட வேண்டும் என்று நிதி மந்திரியை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story