ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டண வசூல்... விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகள் வேதனை...!
ஆம்னி பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை காட்டிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பதாக புகார் பொதுமக்கள் அளித்து வருகின்றனர்.
சென்னை,
அரையாண்டுத் தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கு சென்றிருந்த பொதுமக்கள் சென்னை திரும்ப ஆயத்தமாகி வருகின்றனர். இதன்காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் பேருந்துகள் மற்றும் ரெயில்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இந்நிலையில் ஆம்னி பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை காட்டிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பதாக புகார் பொதுமக்கள் அளித்து வருகின்றனர். குறிப்பாக திருநெல்வேலியில் இருந்து சென்னை வருவதற்கு வழக்கமான நாட்களில் ரூ.1,410 முதல் ரூ.2,130 வரை வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று ரூ.2,900 முதல் ரூ.3,700 வரை வசூலிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
அதேபோல தூத்துக்குடியில் இருந்து சென்னை வருவதற்கு வழக்கமான நாட்களில் ரூ.1,510 முதல் ரூ.2,300 வரை வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று ரூ.2,600 வரை கட்டணம் வசூலிக்கபடுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் மதுரையில் இருந்து சென்னை வருவதற்கு ரூ.1,800 முதல் ரூ.2600 வரை வசூலிக்கப்படுவதாகவும் கோவையில் இருந்து சென்னை வருவதற்கு ரூ.2,250 முதல் ரூ.3,000 வரை வசூலிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அண்மையில் ஆம்னி பேருந்துகளின் அதிகபட்ச கட்டணத்தை அரசு நிர்ணயித்திருந்த நிலையில் தற்போது கூடுதல் கட்டணம் வசூலிக்கபடுவதால் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகள் வேதனை அடைந்துள்ளனர்.