"இந்தியாவின் உண்மையான மகனை இழந்துவிட்டோம்" - ரத்தன் டாடா மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்
ரத்தன் டாடா அனைவராலும் நேசிக்கப்பட்ட மனிதர் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
மும்பை,
பிரபல இந்திய தொழில் அதிபர் மற்றும் டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடா, உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் நேற்றிரவு சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 12 மணியளவில் அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 86.அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ரத்தன் டாடா மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "உலக வரைபடத்தில் இந்தியாவை தனது தொலைநோக்குப் பார்வையாலும் ஆர்வத்தாலும் இடம்பிடித்த ஒரு சிறந்த பழம்பெரும் சின்னம். ஆயிரக்கணக்கான தொழிலதிபர்களை ஊக்கப்படுத்தியவர்..
பல தலைமுறைகளாக லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கியவர். அனைவராலும் நேசிக்கப்பட்டு மதிக்கப்பட்ட மனிதர்.. அவருக்கு எனது ஆழ்ந்த வணக்கங்கள். இந்த பெரிய ஆன்மாவுடன் செலவழித்த ஒவ்வொரு நொடியையும் நான் என்றென்றும் போற்றுவேன்.. இந்தியாவின் உண்மையான மகனை இழந்து விட்டோம்" என்று அதில் ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார்.