"'ரவி'ந்தர் இது தமிழ்நாடு இங்க உன் வேலைய காட்டாத.." - அஜித்தின் துணிவில் இடம்பெற்ற வசனம் வைரல்


ரவிந்தர் இது தமிழ்நாடு இங்க உன் வேலைய காட்டாத.. - அஜித்தின் துணிவில் இடம்பெற்ற வசனம் வைரல்
x
தினத்தந்தி 11 Jan 2023 8:16 PM IST (Updated: 11 Jan 2023 10:19 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு அரசுக்கும் கவர்னர் ரவிக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வருகிறது.

சென்னை,

தமிழ்நாடு அரசுக்கும் கவர்னர் ரவிக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைக்க வேண்டும் என்று கூறி கவர்னர் ரவி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

அதேபோல், 2023-ம் ஆண்டுக்கான முதல் தமிழ்நாடு சட்டசபை கூட்டம் கடந்த திங்கட்கிழமை தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி உரையுடன் தொடங்கியது.

அப்போது, தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையில் உள்ள 65வது பத்தியை கவர்னர் ஆர்.என். ரவி வாசிக்க மறுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பத்தியில், சமூகநீ்தி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கியவளர்ச்சி சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல், பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், திராவிட மாடல் ஆட்சி, தமிழ்நாடு அமைதிப் பூங்கா' என்ற வார்த்தைகள் இடம்பெற்ற நிலையில் அந்த வார்த்தைகளை கவர்னர் ஆர்.என்.ரவி வாசிக்க மறுத்தார்.

மேலும், மாநில அரசு தயாரித்து கொடுத்த உரையை தாண்டி கவர்னர் மேலும் சில கருத்துக்களை கூறினார். இதனால், அவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இதன் பின்னர், கூட்டம் நிறைவடையும் முன்னரே, இந்திய தேசிய கீதம் இசைக்கும் முன்னரே அவையில் இருந்து கவர்னர் ஆர்.என்.ரவி வெளியேறிவிட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல், தமிழ்நாடு கவர்னர் மாளிகையில் நடைபெற உள்ள பொங்கல் நிகழ்ச்சி தொடர்பாக வெளியான அழைப்பிதலில் தமிழ்நாடு என்பதற்கு பதில் தமிழகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரமும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்திய குடிமை பணி நேர்முகத்தேவை எதிர்கொள்ள மாணவர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி கவர்னர் மாளிகையில் நேற்று நடைபெற்றது.

இதில் பேசிய தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி, குடிமையியல் (ஐஏஸ், ஐபிஎஸ்) பணியாளர்கள் மத்திய அரசு பக்கம் தான் நிற்க வேண்டும். மத்திய அரசுக்கு ஆதரவாகத்தான் பேச வேண்டும்' என்று கூறினார். இந்த விவகாரமும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அடுத்தடுத்து சர்ச்சைகளை சந்தித்து வரும் நிலையில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், அஜித்குமார் நடத்து இன்று வெளியான துணிவு திரைப்படத்தின் வசனம் தற்போது வைரலாகி வருகிறது. '''ரவி'ந்தர் இது தமிழ்நாடு இங்க உன் வேலைய காட்டாத.." என்று அஜித்குமாரின் துணிவு படத்தில் இடம்பெற்றுள்ள வசனம் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாடு அரசு - கவர்னர் ரவி இடையேயான மோதல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் அஜித்தின் துணிவு இடம்பெற்றுள்ள '''ரவி'ந்தர் இது தமிழ்நாடு இங்க உன் வேலைய காட்டாத.." வசனம் வைரலாகி வருகிறது.




Next Story