ஆம்பூர், குடியாத்தம் பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்


ஆம்பூர், குடியாத்தம் பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்
x

வேலூர் கொணவட்டம் வழியாக ஆம்பூர், குடியாத்தம், பேரணாம்பட்டு பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

வேலூர்

குறைதீர்வு கூட்டம்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நேற்று நடைபெற்றது. ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் தனஞ்செயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா உள்ளிட்டவை தொடர்பாக 365 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டார்.

கூட்டத்தில், கூட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தினர் அளித்த மனுவில், வேலூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிகாரிகள் இடமாற்றம் செய்ய கூடாது. கல்லப்பாடி, கே.வி. குப்பம், டி.டி.மோட்டூர், பீஞ்சமந்தை, வேலூர் டவுன், தொரப்பாடி, குடியாத்தம் பகுதியில் இரவு நேரங்களில் 108 ஆம்புலன்ஸ் இயக்கப்படுவதில்லை. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி பொதுமக்கள் அவதி அடைகின்றனர். எனவே அனைத்து நேரங்களிலும் 108 ஆம்புலன்ஸ் சேவை விரைவாக எளிதில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தொழிலாளர் நலச்சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தனர்.

கொணவட்டம் வழியாக...

எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் அளித்த மனுவில், வேலூர் புதிய, பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஆம்பூர், குடியாத்தம், பேரணாம்பட்டு செல்லும் அரசு பஸ்கள் கொணவட்டம் வழியாக சென்று வந்தன. தற்போது புதிய பஸ்நிலையம் பயன்பாட்டுக்கு வந்த பின்னர் கொணவட்டம் வழியாக வருவதில்லை. மாறாக தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று விடுகின்றன. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். எனவே மீண்டும் கொணவட்டம் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

அண்ணா ரிக்ஷா தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ஏழுமலை மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில், வேலூர் மாநகரில் 100-க்கும் மேற்பட்ட சைக்கிள் ரிக்ஷா தொழிலாளர்கள் உள்ளனர். அனைவரும் வாடகை வீட்டில் வசிக்கின்றனர். தொழிலில் போதுமான வருமானம் இல்லாதால் பலர் மார்க்கெட்டில் கூலிவேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள். எனவே ரிக்ஷா தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி வீடு கட்டி தரவும், அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

விமான நிலையம்

வேலூர் சாய்நாதபுரத்தை சேர்ந்த தொல்லியல் கல்வெட்டு ஆய்வாளர் தமிழ் புகழேந்தி கொடுத்த மனுவில், காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ள பன்னாட்டு பசுமை விமான நிலையத்தை, இயற்கை அமைப்பில் சிறப்பாக உள்ள வேலூரில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் பொதுமக்கள் மிகுந்த பயன் அடைவார்கள். அரசுக்கும் பல நன்மைகள் கிடைக்கும். இதுதொடர்பாக அரசுக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்து வேலூரில் விமான நிலையம் அமைத்து தர வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற தேசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் வெற்றிப்பெற்ற வீரர்கள், வீராங்கனைகள் கலெக்டர் குமாரவேல்பாண்டியனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது மாவட்ட விளையாட்டு நல அலுவலர் நோயலின்ஜான் மற்றும் பயிற்சியாளர்கள் உடனிருந்தனர்.


Next Story