சொத்துவரி, தொழில்வரி இந்த மாதத்திற்குள் செலுத்தாவிட்டால் நடவடிக்கை - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை


சொத்துவரி, தொழில்வரி இந்த மாதத்திற்குள் செலுத்தாவிட்டால் நடவடிக்கை - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
x

இந்த மாத இறுதிக்குள் சொத்துவரி, தொழில்வரி செலுத்தாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை,

சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட சொத்து உரிமையாளர்கள் 12 லட்சம் பேர் உள்ளனர். குடியிருப்பு வீடுகளாகவும், வணிக பகுதியாகவும் இவை கணக்கிடப்படுகிறது. சொத்து வரி ஆண்டுக்கு இருமுறை அரையாண்டு வீதம் வசூலிக்கப்படுகிறது. சொத்துவரி உயர்த்தப்பட்டு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பு

திய சொத்து வரி மூலம் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.1200 கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சொத்து வரியை வசூலிக்க வருவாய் துறை ஊழியர்கள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். முதல் அரையாண்டு காலம் இந்த மாதத்துடன் முடிவதால் ரூ.700 கோடி வசூலிக்க வேண்டும். ஆனால், இதுவரையில் ரூ.490 கோடி தான் வசூல் ஆகி இருப்பதாக வருவாய் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்னும் ரூ.210 கோடி வசூலிக்க வேண்டிய நிலையில் இலக்குடன் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மாநகராட்சி எடுத்து வருகிறது. புதிய சொத்துவரி மட்டுமல்லாமல் ஏற்கனவே செலுத்தாமல் நிலுவையில் உள்ள சொத்து வரியையும் செலுத்த உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

சொத்துவரி செலுத்தாமல் இருந்து வரும் உரிமையாளர்கள் மீது சீல் வைப்பு நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இதேபோல தொழில் வரி செலுத்தவும் இந்த மாதம் வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. தொழில் வரியாக ரூ.250 கோடி வசூலிக்க வேண்டும். தொழில் செய்யக் கூடிய நிறுவனங்கள், தொழில் வரி செலுத்த வேண்டும். அதற்கான காலக்கெடுவும் இம்மாதத்துடன் முடிவதால் அதனையும் வசூலிக்க தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சொத்துவரி, தொழில்வரி இந்த மாதத்திற்குள் செலுத்தாவிட்டால் அவர்கள் மீது அபராத நடவடிக்கை எடுக்கப்படும். தொடர் நோட்டீசுக்கு விளக்கம் தராமல் இருந்து வரும் உரிமையாளர்களின் சொத்து சீல் வைக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story