ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் வளர்ச்சிக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்- மகளிர் உரிமை துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் பேச்சு


ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் வளர்ச்சிக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்- மகளிர் உரிமை துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் பேச்சு
x

ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் கண்காணிக்கப்பட்டு வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் தெரிவித்தார்.

திருவள்ளூர்

ஆய்வு கூட்டம்

திருவள்ளூரை அடுத்த நேமம் பகுதியில் உள்ள குழந்தைகள் மையத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பாக ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளை கண்டறிந்து அந்த குழந்தைகளை ஊட்டச்சத்து குறைபாடுகளில் இருந்து மேம்படுத்தும் விதமாக ஏற்படுத்தப்பட்டுள்ள ஊட்டச்சத்தை உறுதி செய் என்ற திட்டம் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இதற்கு சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை அரசு கூடுதல் தலைமை செயலர் ஷம்பு கல்லோலிகர் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் இயக்குனர் அமுதவள்ளி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

சிறப்பு ஊட்டச்சத்து திட்டம்

அப்போது சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் கூறியதாவது:-

ஆரோக்கியமான குழந்தைகளே நாட்டின் வளமான எதிர்காலம் என்பதை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 7-5-2022 அன்று சட்டமன்றத்தில் விதி 110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பில் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளை நலமுடன் வளர்க்கும் நோக்கத்துடன், பரந்துபட்ட அளவில் குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்து மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கு மருத்துவ உதவியும், ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து திட்டம் ஒன்று ஏற்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டா ஊராட்சியில் 21-5-2022 அன்று இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அதனை செயல்படுத்தும் விதமாக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் மற்றும் சுகாதார துறை 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் கடுமையான மற்றும் மிதமான ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகள் மற்றும் ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகள் ஆகியோரை பிரித்தறிந்து குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கை

இந்த சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு மாத காலத்திற்கு நடைபெற்றது. இதன்மூலம் கடுமையான மற்றும் மிதமான ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்களாக கண்டறியப்பட்டுள்ள குழந்தைகள் கண்காணிக்கப்பட்டு அவர்களின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மேலும் சிறப்பு மருத்துவ பரிசோதனைகளுக்குட்படும் குழந்தைகளின் விவரங்கள் அதற்கென வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு கண்காணிக்கப்படும். மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு ஊட்டச்சத்து மற்றும் தேவைப்படும் குழந்தைகளுக்கு தனியாக சிறப்பு ஊட்டச்சத்து வழங்கப்படும்.

குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவுகளின் அவசியத்தை அவர்களின் பெற்றோருக்கு தெளிவுபடுத்த வேண்டும். 6 மாத குழந்தையின் தாய்மார்களிடம் ஊட்டச்சத்து உணவின் அவசியத்தை எடுத்து கூற வேண்டும்.

குழந்தைகள் மையத்தில் குழந்தைகளின் ஆரோக்கியத்தை அங்கன்வாடி பணியாளர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். குழந்தைகள் மையத்தில் தமிழக அரசின் திட்டங்கள் மூலம் குழந்தைகளுக்கு ஆரோக்கிய நிலைமையை மேம்படுத்த வேண்டும். ஆரோக்கியமான குழந்தைகள் வளர்ந்திட அனைவரும் பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மருத்துவ பரிசோதனை முகாம்

பின்னர் அவர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பாக ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளை கண்டறிந்து குழந்தைகளுக்கான ஊட்டச்சத்தை மேம்படுத்தும் வகையில் நடைபெறும் மருத்துவ பரிசோதனை முகாமை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி மற்றும் மருத்துவ கல்லூரி முதல்வர் அரசி ஸ்ரீவத்சவ், சுகாதாரத்துறை துணை இயக்குனர் லட்சுமி முரளி (காசநோய்), திருவள்ளூர் ஆர்.டி.ஓ. ரமேஷ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் லலிதா, டாக்டர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story