செந்தில் பாலாஜியை உடனடியாக காவலில் எடுக்க நடவடிக்கை - புழல் சிறைக்கு விரைந்த அமலாக்கத்துறை அதிகாரிகள்..!
செந்தில் பாலாஜியை உடனடியாக காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் புழல் சிறைக்கு விரைந்துள்ளனர்.
சென்னை,
சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த ஜூன் மாதம் கைது செய்தது. தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் செந்தில் பாலாஜியின் கைது சட்ட விரோதம் எனக் கூறி சுப்ரீம் கோர்ட்டில் அவரது மனைவி தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த வழக்கின் விசாரணை கடந்த வாரம் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், செந்தில் பாலாஜி வழக்கில் இன்று காலை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.
அதில், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தது சட்டவிரோதம் இல்லை. இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடையில்லை என்றும், கைது செய்த பிறகு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியாது என்றும் கூறி, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும், புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜியை ஆகஸ்ட் 12 வரை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜியை காவலில் எடுப்பது தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் ஒரு அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது செந்தில் பாலாஜியை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார். அதன்படி ஆகஸ்ட் 12-ந்தேதி வரை காவல் விதித்து உத்தரவிட்டுள்ள நீதிபதி மீண்டும் வருகிற 12-ந்தேதி செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜியை காவலில் எடுக்கும் உத்தரவு மின்னஞ்சல் மூலம் புழல் சிறைக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து அவரை உடனடியாக காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் புழல் சிறைக்கு விரைந்துள்ளனர். கும்மிடிப்பூண்டி அல்லது சென்னை அலுவலகத்திற்கு செந்தில் பாலாஜியை அழைத்து சென்று விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.