தாம்பரம் மாநகராட்சிக்கு புதிய கட்டிடம் கட்ட ரூ.50 கோடி பெற்றுத்தர நடவடிக்கை - அமைச்சர் கே.என்.நேரு உறுதி


தாம்பரம் மாநகராட்சிக்கு புதிய கட்டிடம் கட்ட ரூ.50 கோடி பெற்றுத்தர நடவடிக்கை - அமைச்சர் கே.என்.நேரு உறுதி
x

தாம்பரம் மாநகராட்சிக்கு புதிய கட்டிடம் கட்ட ரூ.50 கோடி பெற்றுத்தர அமைச்சர் கே.என்.நேரு உறுதியளித்துள்ளார்.

செங்கல்பட்டு

தாம்பரம் மாநகராட்சி, 2-வது மண்டல அலுவலகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம், முதல்வர் காப்பீடு அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து அனகாபுத்தூர் பகுதியில் ரூ.18.88 கோடி மதிப்பீட்டில் குடிநீர் அபிவிருத்தி திட்டங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தல், மேற்கு தாம்பரம் மற்றும் கிழக்கு தாம்பரம் பகுதிகளில் ரூ.161 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளை பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தி.மு.க நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ முகாம், முதல்வர் காப்பீடு அட்டை, முடிவடைந்த குடிநீர், பாதாள சாக்கடை திட்டங்கள் ஆகியவற்றை தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து தாம்பரம் மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் சேவை துறை அலுவலர்கள் உடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் கார்த்திகேயன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், மாநகராட்சி ஆணையர் அழகுமீனா, மண்டல தலைவர்கள் ஜோசப் அண்ணாதுரை, கருணாநிதி. காமராஜ், இந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கே.என் நேரு கூறுகையில், 'தாம்பரம் மாநகராட்சி புதிய கட்டிடம் கட்ட ரூ.10 கோடி ரூபாய் முதலமைச்சர் அறிவித்திருந்தார். தற்போது ரூ.50 கோடி கேட்டு கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள். இது தொடர்பாக முதல்-அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அதைபோல தாம்பரம் மாநகராட்சியில் அலுவலர்கள் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.


Next Story