ஓய்வு பெற்ற மின்ஊழியரிடம் 30 பவுன் நகை அபேஸ்
சேலம் பஸ் நிலையத்தில் ஓய்வு பெற்ற மின்ஊழியரிடம் 30 பவுன் நகை அபேஸ் செய்யப்பட்டுள்ளது. அவரை நோட்டமிட்டு மர்மநபர் கைவரிசை காட்டியுள்ளார்.
ஓய்வு பெற்ற மின்ஊழியர்
ஈரோடு லட்சுமிநகர் பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 80). ஓய்வு பெற்ற மின்சார வாரிய ஊழியர். இவர் பெங்களூருவில் உள்ள மகனை பார்க்க முடிவு செய்தார். அதற்காக மனைவியை அழைத்துக் கொண்டு சேலம் புதிய பஸ் நிலையம் வந்தார்.
பின்னர் பெங்களூரு செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்துக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவர், ஒரு பையில் 30 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் வைத்திருந்தார்.
மர்மநபர் கைவரிசை
இதனை நோட்டமிட்ட மர்மநபர், தாமோதரன் வைத்திருந்த பையை நைசாக அபேஸ் செய்து விட்டார். சிறிது நேரம் கழித்து பையை காணாதது கண்டு தாமோதரன் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மகன் வீட்டுக்கு செல்லும் வழியில் 30 பவுன் நகைகளை தாமோதரன் பறிகொடுத்த சம்பவம் சேலம் புதிய பஸ் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போலீசார் ஒலிபெருக்கி மூலம் திருடர்கள் ஜாக்கிரதை என 24 மணி நேரம் எச்சரிக்கை செய்து கொண்டிருந்தாலும், இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் இரவு நேரங்களில் பஸ் நிலையத்தில் அடிக்கடி அரங்கேறி வருவது பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.