வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும்


வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும்
x
தினத்தந்தி 1 Feb 2023 12:15 AM IST (Updated: 1 Feb 2023 2:55 PM IST)
t-max-icont-min-icon

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என பொதுமக்களுக்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கடலூர்


வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள விவரங்களை உறுதி செய்வதற்காகவும், ஒரே வாக்காளரின் பெயர் வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இடம் பெறுவதை தடுத்திடவும் வாக்காளர் தங்கள் சுயவிருப்பத்தின் பேரில் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடந்த 1.8.2022 முதல் ஆதார் எண் இணைக்கும் பணியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது வரை மாவட்டத்தில் 13 லட்சத்து 77 ஆயிரத்து 15 வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை, வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துள்ளனர்.

இறுதி நாள்

எனவே இதுவரை ஆதார் எண் இணைத்திடாத வாக்காளர்கள் படிவம் 6பி-ஐ பூர்த்தி செய்து, தங்களது ஆதார் அட்டை நகலுடன் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளிப்பதன் மூலம் தங்களது வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம். மேலும் https://www.nvsp.in/என்ற இணையதளம் மற்றும் Voter Helpline App மூலமும் தங்கள் ஆதார் எண் விவரங்களை வாக்காளர் அட்டையுடன் இணைத்துக் கொள்ளலாம்.

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பதற்கு 31.3.2023 அன்றைய தேதியை இறுதி நாளாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள், இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது ஆதார் எண்ணை, வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்து பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story