கவர்ச்சி உடை, சாதுர்ய பேச்சால் கடைகளில் நூதன மோசடி செய்த இளம்பெண்
தாம்பரம் பகுதியில் உள்ள கடைகளில் கவர்ச்சியாக உடை அணிந்து வந்து, சாதுர்யமான பேச்சால் கடைக்காரர்களின் கவனத்தை திசை திருப்பி நூதன மோசடியில் ஈடுபட்ட இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
தாம்பரம்,
சென்னையை அடுத்த தாம்பரம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பணம் பரிவர்த்தனை செய்யும் செல்போன் கடைகளில் கவர்ச்சியாக உடையணிந்து வரும் இளம்பெண், தனக்கு உடனடி மருத்துவத் தேவை இருப்பதாக கூறி, தான் சொல்லும் எண்ணுக்கு அவசரமாக பணம் பரிவர்த்தனை செய்யுங்கள் என்று கூறுவார்.
அதன்படி கடைக்காரர் பணம் அனுப்பியவுடன், அதற்கான பணத்தை ரொக்கமாக கொடுக்காமல் 'பேட்டி எம்' மூலம் 'கியூ.ஆர். ஸ்கேனர்' பயன்படுத்தி அனுப்புவதாக கூறுவார். பின்னர் கடைக்காரருடன் சாதுர்யமாக பேச்சு கொடுத்து, அவரது கவனத்தை திசை திருப்பிவிட்டு, பணத்தை அனுப்பி விட்டதாக கூறி செல்போனில் போலியாக எடுத்து வைத்து இருக்கும் 'ஸ்கிரீன் சாட்டை' காண்பித்துவிட்டு வெளியே தயாராக நிற்கும் காதலனின் மோட்டார்சைக்கிளில் ஏறி தப்பிச்சென்று விடுவார்.
அந்த கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, இந்த நூதன மோசடியில் ஈடுபட்ட இளம்பெண்ணை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் தாம்பரத்தில் உள்ள ஒரு செல்போன் கடையில் அந்த இளம்பெண், இதே பாணியில் மோசடி செய்ய முயன்றார். சுதாரித்து கொண்ட கடைக்காரர், அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் இளம்பெண்ணை கையும் களவுமாக மடக்கிப்பிடித்து சேலையூர் போலீசில் ஒப்படைத்தார்.
போலீஸ் விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் ஷெரில்கன்சால்வெஸ் (வயது 20) என்பதும், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இவர், செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அய்யன்சேரி பகுதியில் தனது சகோதரனுடன் தங்கி இருப்பதும் தெரிந்தது. மேலும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சேலத்திலும் இதுபோல் நூதன மோசடியில் ஈடுபட்டு சிறைக்கு சென்று வந்ததும் தெரியவந்தது.
கவர்ச்சியாக உடை அணிந்தும், சாதுர்யமான பேச்சு திறமையாலும் தாம்பரம் சுற்று வட்டார பகுதியில் உள்ள பல கடைகளில் அந்த பெண் இந்த நூதன மோசடியில் ஈடுபட்டு உள்ளார். அவரிடம் ஏமாந்தவர்கள் எத்தனை பேர்? என்பது குறித்து இனிதான் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த இளம்பெண்ணின் காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.