காரில் கடத்தப்பட்ட இளம்பெண்... விசாரணையில் திடீர் திருப்பம்
மதுரையில் இருந்து தேனிக்கு காரில் கடத்தியதாக கூறப்பட்ட இளம்பெண்ணை போலீசார் மீட்டனர்.
தேனி,
மதுரை எஸ்.எஸ்.காலனியில் நேற்று முன்தினம் பட்டப்பகலில் 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணை சிலர் காரில் கடத்தி செல்வதாக மதுரை மாவட்ட போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
மேலும் தகவல் கொடுத்த நபர், கடத்தியபோது எடுத்ததாக புகைப்படங்களையும் போலீசாருக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. அதன்பேரில் போலீசார் அந்த கார் சென்ற பகுதிகளை சி.சி.டி.வி. கேமராக்கள் உதவியுடன் கண்காணித்தனர். அப்போது அந்த கார் தேனியை நோக்கி செல்வது தெரியவந்தது.
இதையடுத்து மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ஆண்டிப்பட்டி, க.விலக்கு போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். மேலும் சம்பந்தப்பட்ட காரில் வந்தவர்களை பிடிக்க தேனி மாவட்டம் போலீசார் முடுக்கி விடப்பட்டனர்.
இந்தநிலையில் தேனி போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார், மதுரை சாலையில் ரோந்து சென்றனர். அப்போது தொழிற்பேட்டை அருகில் சந்தேகப்படும்படி 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்தபோது, பெண்ணை கடத்தியதாக கூறப்பட்ட கும்பலை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது.
அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியபோது, அவர்கள் வந்த கார் விபத்தில் சிக்கியதால் வேறு இடத்தில் நிறுத்தி வைத்து இருப்பதாகவும், சம்பந்தப்பட்ட பெண்ணை பூதிப்புரத்தில் உள்ள ஒரு வீட்டில் வைத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதனையடுத்து பூதிப்புரத்துக்கு போலீசார் விரைந்தனர். அங்கு ஒரு வீட்டில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட அந்த பெண்ணை மீட்டனர். மேலும் கடத்தியதாக பெண் உள்பட மேலும் 2 பேரை போலீசார் பிடித்தனர். மீட்கப்பட்ட பெண், பிடிப்பட்ட பெண் உள்பட 4 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது திடீர் திருப்பமாக, கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண், தன்னை அவர்கள் கடத்தி வரவில்லை என்று கூறினார். அதைக்கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் விசாரணையில், கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண்ணுக்கும், கடத்தியதாக கூறப்பட்ட நபர்களுக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் உள்ளது.
அந்த பிரச்சினையில் பணத்தை வசூலிப்பதற்காக அந்த பெண்ணை தேனிக்கு காரில் அழைத்து வந்ததாக கூறினர். இருப்பினும் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக தகவல்களை கூறியதாக தெரிகிறது.
இதற்கிடையே இந்த தகவல் அறிந்ததும் மதுரையில் இருந்து தனிப்படை போலீசார் தேனிக்கு வந்தனர். பின்னர் மதுரை போலீசாரிடம், கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் மற்றும் கடத்தியதாக பிடிபட்ட 4 பேரையும் போலீசார் ஒப்படைத்தனர். அவர்களை போலீசார் விசாரணைக்காக மதுரைக்கு அழைத்து வந்தனர்.