வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டுயானை
அக்காமலை எஸ்டேட் பகுதியில் வாழை மரங்களை காட்டுயானை சேதப்படுத்தியது.
வால்பாறை
அக்காமலை எஸ்டேட் பகுதியில் வாழை மரங்களை காட்டுயானை சேதப்படுத்தியது.
காட்டுயானை கூட்டம்
வால்பாறை பகுதியில் காட்டுயானைகள் நடமாட்டம் தொடங்கி விட்ட நிலையில், அவை கூட்டமாகவும், தனியாகவும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் அக்காமலை புல்மேடு பகுதியில் குட்டிகளுடன் 10-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் முகாமிட்டு சுற்றித்திரிந்து வருகிறது. இந்த யானைகள் கூட்டத்தை சேர்ந்த ஒற்றை யானை நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணியளவில் அக்காமலை எஸ்டேட் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது.
வாழை மரங்கள் சேதம்
அதன்பின்னர் தொழிலாளர்களின் வீட்டு தோட்டத்தில் பயிரிடப்பட்டு இருந்த வாழை மரங்கள் முழுவதையும் தின்று சேதப்படுத்தி விட்டு சென்றது.
இதுகுறித்து அக்காமலை எஸ்டேட் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கூறுகையில், இந்த ஒற்றை யானை ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதத்தில் வந்து வீட்டு தோட்டத்தில் இருக்கும் வாழை மரங்களை தின்று விட்டு செல்கிறது. ஆனால் வீடுகளுக்கோ, தொழிலாளர்களுக்கோ எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாமல் சென்று விடுகிறது. மீண்டும் அது ஊருக்குள் நுழையாமல் தடுக்க வேண்டும் என்றனர்.