தொழிலாளி வீட்டை சேதப்படுத்திய காட்டுயானை
ஓவேலியில் தொழிலாளி வீட்டை காட்டுயானை சேதப்படுத்தியது. மேலும் குடிநீர் தொட்டியையும் உடைத்தது.
கூடலூர்
ஓவேலியில் தொழிலாளி வீட்டை காட்டுயானை சேதப்படுத்தியது. மேலும் குடிநீர் தொட்டியையும் உடைத்தது.
வீடு முற்றுகை
கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பகுதியில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அங்குள்ள திருவள்ளூவர் நகர் பகுதியில் தனியார் எஸ்டேட்டுக்குள் 2 காட்டுயானைகள் முகாமிட்டு உள்ளது. அவை இரவில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு ஊருக்குள் ஒரு காட்டுயானை நுழைந்தது. பின்னர் தொழிலாளி பத்மநாபன் என்பவரது வீட்டை முற்றுகையிட்டது. இதனால் வீட்டில் இருந்த அனைவரும் அச்சம் அடைந்து, பாதுகாப்பான இடத்தில் பதுங்கி கொண்டனர்.
காட்டுயானை அட்டகாசம்
இதையடுத்து வீட்டின் முன்பக்கத்தை காட்டுயானை உடைத்தது. மேலும் குடிநீர் தொட்டியை சேதப்படுத்தியது. இது தவிர பாக்கு, வாழை உள்ளிட்ட விவசாய பயிர்களை தின்று அட்டகாசம் செய்தது.
இதை அறிந்த வனத்துறையினர் காட்டுயானையை விரட்ட வேனில் விரைந்து வந்தனர். அப்போது ஊருக்கு அருகே வந்ததும், திடீரென வேன் சேற்றில் சிக்கியது. எனினும், அங்கிருந்து நடந்து வந்த வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து பொதுமக்கள் உதவியுடன் நீண்ட நேரம் போராடி காட்டுயானையை விரட்டியடித்தனர்.
கிறிஸ்தவ கெபி
இதையடுத்து காட்டுயானையால் சேதம் அடைந்த வீட்டை வருவாய்த்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது, அதற்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும், காட்டுயானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதேபோன்று பெரியசோலை பகுதியில் உள்ள கிறிஸ்தவ கெபியை மற்றொரு காட்டுயானை உடைத்து சேதப்படுத்தியது. அங்கு வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.