தமிழகம் முழுவதும் நாளை முதல் வருகிற 9-ந் தேதி வரை ஆயிரத்து 360 சிறப்பு பஸ்கள் இயக்கம்


தமிழகம் முழுவதும் நாளை முதல் வருகிற 9-ந் தேதி வரை ஆயிரத்து 360 சிறப்பு பஸ்கள் இயக்கம்
x

கோப்புப்படம் 

சிவராத்திரி, வார விடுமுறை தினங்களை முன்னிட்டு நாளை முதல் வருகிற 9-ந் தேதி வரை ஆயிரத்து 360 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

சென்னை,

தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சிவராத்திரி மற்றும் முகூர்த்தம் வருகிற 8-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வருவதாலும், 9, 10-ந் தேதிகள் சனி, ஞாயிறு வார விடுமுறை தினங்கள் என்பதாலும் சென்னையில் இருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 7-ந் தேதி (நாளை) வியாழக்கிழமை அன்று 270 பஸ்களும், 8-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று 390 பஸ்களும், 9-ந் தேதி (சனிக்கிழமை) 430 பஸ்களும் இயக்கப்படுகின்றன.

மேலும், சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 8 மற்றும் 9-ந் தேதிகளில் 70 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதே போன்று, பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 1,360 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகு ஏற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வார இறுதியில் வியாழக்கிழமை அன்று 9 ஆயிரத்து 96 பயணிகளும் வெள்ளிக்கிழமை 7 ஆயிரத்து 268 பயணிகளும் சனிக்கிழமை 3 ஆயிரத்து 769 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 9 ஆயிரத்து 11 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர்.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் செல்போன் செயலி(ஆப்) மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இச்சிறப்பு பஸ் இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பஸ் நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story