பாலத்தில் இருந்து மின்சார ரெயில் மீது விழுந்த வாலிபர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதி


பாலத்தில் இருந்து மின்சார ரெயில் மீது விழுந்த வாலிபர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதி
x

சென்னை பூங்கா நகர் மேம்பாலத்தில் இருந்து மின்சார ரெயில் மீது விழுந்த வாலிபர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

சென்னை

சென்னை பூங்கா நகர் மேம்பாலத்தின் கீழே நேற்று காலை 11 மணி அளவில் தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி மின்சார ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பாலத்தின் மீது நின்றுகொண்டிருந்த வாலிபர் ஒருவர் திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் பாலத்தில் இருந்து கீழே ஓடும் ரெயிலின் மீது குதித்தார். மின்சார ரெயிலின் மேல் இருந்த மின்கம்பிகளில் விழுந்த அந்த வாலிபர், மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு தண்டவாளம் அருகே விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த ரெயிலில் சென்ற பயணிகள் கூச்சலிட்டனர். அங்கிருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த எழும்பூர் ரெயில்வே போலீசார், மின்சாரம் தாக்கியதில் உடல் கருகி உயிருக்கு போராடிய வாலிபரை மீட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து எழும்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், அந்த நபர் பீகார் மாநிலத்தை சேர்ந்த சிக்கந்தர் ராய் (வயது 26) என்பது தெரியவந்தது. மேலும் அந்த வாலிபர் தற்கொலை செய்ய முயன்றாரா? அல்லது வேறு எதேனும் காரணமா? என்பது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


Next Story