கலெக்டர் அலுவலக வளாகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


கலெக்டர் அலுவலக வளாகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு நிலவியது.

திருவள்ளூர்

திருவள்ளூர்,

பள்ளிப்பட்டு, அத்திமாஞ்சரிபேட்டையை சேர்ந்தவர் விஜய் (வயது 26). இவர் அந்த பகுதியில் ஸ்டுடியோ கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வசிக்கும் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு கோவில் திருவிழா நடந்தது. அப்பொழுது அவர் வீட்டின் அருகே அதிக சத்தத்துடன் பாடல்கள் ஒலித்ததால் கோவில் நிர்வாகத்திடம் சென்று விஜய் சத்தத்தை குறைக்குமாறு கூறினார். ஆனால் தொடர்ந்து அதிக சத்தத்துடன் பாட்டு ஒலித்ததால் அத்திரமடைந்த விஜய் போலீஸ் கட்டுபாட்டு அறை எண் 100-க்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொதட்டூர்பேட்டை போலீசார் கோவில் நிர்வாகத்தினர்களிடம் பேசி சத்தத்தை குறைத்து வைக்கும்படி அறிவுறுத்தி சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கோவில் நிர்வாகத்தினர் சிலர் விஜய் வீட்டிற்குள் புகுந்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று காலை திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த விஜய் அலுவலக நுழைவாயிலில் நின்று தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்பொழுது அங்கிருந்த போலீசார் உடனே அவரை தடுத்து நிறுத்தினர். அதன் பிறகு மாற்று உடையை அவருக்கு கொடுத்து திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வாலிபர் கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மற்றொரு சம்பவம்

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து திருத்தணி நோக்கி வந்த புறநகர் மின்சார ரெயில் நேற்று காலை 9.50 மணிக்கு திருத்தணி ரெயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது திருத்தணி திரௌபதி அம்மன் ஆலயம் எதிரே உள்ள ரெயில் தண்டவாளத்தின் அருகே நின்று கொண்டிருந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென ரெயிலில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலைக்கு முயன்றார்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ரெயிலின் எஞ்ஜின் டிரைவர் உடனே சுதாரித்துக்கொண்டு ரெயிலின் எமர்ஜென்சி பிரேக்கை அழுத்தி ரெயிலை நிறுத்தினார். பின்னர் ரெயிலில் இருந்து இறங்கிய எஞ்ஜின் டிரைவர் மற்றும் பொதுமக்கள் தண்டவாளத்தில் படுத்திருந்த வாலிபரை அப்புறப்படுத்தி அவருக்கு அறிவுரைகள் வழங்கி அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலைக்கு முயற்சியால் சிறிது நேரம் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story