பாலியல் குற்றங்களுக்கான தண்டனையைக் கடுமையாக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் - சீமான்


பாலியல் குற்றங்களுக்கான தண்டனையைக் கடுமையாக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் - சீமான்
x

குற்றச்சமூகமாக மாறிப்போன இச்சமூகத்தில் வாழும் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்தப் பெருங்கவலை என்னை வாட்டி வதைக்கிறது என கூறியுள்ளார்.

சென்னை,

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே கெங்கை சூடாமணியிலுள்ள தனியார் பள்ளியில் 4 வயது பெண்குழந்தை அரசுப்பள்ளி ஆசிரியரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனவேதனையும் அடைந்தேன்.

தாய்வழிச்சமூகமாக விளங்கிப் பெண்களுக்கு முதன்மைத்துவம் வழங்கிப் போற்றிக் கொண்டாடிய தமிழ்ச்சமூகத்தில், பெண் பிள்ளைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிற இன்றைய கொடும் நிலை கண்டு வெட்கி தலைகுனிகிறேன். குற்றச்சமூகமாக மாறிப்போன இச்சமூகத்தில் வாழும் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்தப் பெருங்கவலை என்னை வாட்டி வதைக்கிறது.

அரிதினும் அரிதான வழக்குகளில் வழங்கப்படும் மரணத்தண்டனையை பாலியல் வன்கொடுமைக் குற்றங்களுக்கான தண்டனையாக வரையறுத்து, அதற்கென தனிச்சட்டமியற்றி, தண்டனைகளைக் கடுமையாக்குவதே இக்குற்றச்செயல்களைத் தடுப்பதற்கான ஒரே வாய்ப்பாகும்.

ஆகவே, இக்குற்றச்செயலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள அரசுப்பள்ளி ஆசிரியரான காமராஜை நிரந்தரப் பணி நீக்கம் செய்து, கடும் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, உச்சபட்ச தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள குழந்தைக்கு தகுந்த மருத்துவச் சிகிச்சையும், உளவியல் சிகிச்சையும் அளித்து, மீண்டுவர அரசு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story