திருவள்ளூர் அருகே துப்பட்டாவில் கழுத்து இறுக்கி பள்ளி மாணவன் சாவு
திருவள்ளூர் அருகே துப்பட்டாவில் கழுத்து இறுக்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.
திருவள்ளூர் அடுத்த புட்லூர் பி.வி.ஆர். நகரை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 45) சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுமதி. இவர் காக்களூர் தொழிற்பேட்டையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவர்களுடைய மகள் சாதனா (13). மகன் புகழ்மாறன் (8). காக்களூரில் உள்ள தனியார் பள்ளியில் புகழ்மாறன் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று முன்தினம் காலை புருஷோத்தமன் மற்றும் சுமதி வேலைக்கு சென்று விட்டனர். மழையால் பள்ளி விடுமுறை என்பதால் சாதனா, புகழ்மாறன் ஆகியோர் வீட்டில் இருந்தனர். அவர்களுடன் பாட்டி களஞ்சியம் உடன் இருந்தார்.
வேலைக்கு சென்ற சுமதி மாலை வீட்டுக்கு வந்தார். சுமதியும் அவரது மகள் சாதனாவும் சாப்பிட்டுகொண்டிருந்தனர். அப்போது மாமியார் களஞ்சியத்திடம் மகன் எங்கே என்று கேட்டார். அதற்கு அவர் படுக்கையறையில் விளையாடி கொண்டிருப்பதாக கூறியுள்ளார். சுமதி படுக்கையறைக்கு சென்று பார்த்தபோது ஜன்னலில் கட்டப்பட்டிருந்த துணி காயவைக்கும் நைலான் கயிற்றில் போடப்பட்டிருந்த நைலான் துப்பட்டாவில் கழுத்தில் மாட்டிக்கொண்டு இரு கைகளும் துப்பட்டாவுடன் இறுக்கியபடி புகழ்மாறன் சுய நினைவின்றி கிடந்ததை பார்த்து கதறி துடித்தார்.
குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த புகழ்மாறன் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான். இது குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.