குளத்தில் மீன் பிடிக்க விரித்த வலையில் சிக்கிய மலைப்பாம்பு


குளத்தில் மீன் பிடிக்க விரித்த வலையில் சிக்கிய மலைப்பாம்பு
x
தினத்தந்தி 15 Jun 2023 12:15 AM IST (Updated: 15 Jun 2023 12:44 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே கோரம்பள்ளம் குளத்தில் மீன் பிடிக்க விரித்த வலையில் மலைப்பாம்பு சிக்கியது.

தூத்துக்குடி

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி அருகே கோரம்பள்ளம் குளத்தில் மீன்பிடிக்க விரித் வலையில் மலைப்பாம்பு சிக்கியது. பின்னர் அந்த பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கோரம்பள்ளம் குளம்

தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம் குளத்தில் தண்ணீர் வற்றிய நிலையில், தற்போது ஆழமான பகுதிகளில் மட்டும் தண்ணீர் காணப்படுகிறது.

அந்தப் பகுதிகளில், சிலர் வலையை விரித்து மீன் பிடிப்பது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் தூத்துக்குடி முத்தையாபுரம், குமாரசாமிநகர் 3-வது தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் மீன்பிடிப்பதற்காக கோரம்பள்ளம் குளத்தில் வலையை விரித்து வைத்திருந்தார். நேற்று காலையில் சென்று அவர் மீன்களுக்காக வலையை வெளியே இழுக்க முயன்றார். ஆனால் அவரால் வலையை இழுக்க முடியவில்லை.

மீன் வலையில் மலைப்பாம்பு

இதனால் அதிக அளவில் மீன்கள் வலையில் சிக்கி இருக்கும் என்ற ஆசையில் அருகிலிருந்த சிலரை அழைத்து வலையை இழுத்துள்ளனர். அப்போது வலையில் மிகப் பெரிய மலைப்பாம்பு சிக்கியிருப்பது தெரியவந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அவர்கள் தெர்மல் நகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சகாயராஜ் தலைமையில், தீயணைப்பு படை வீரர்கள் பொன்னம்பலராஜ், சுப்பிரமணியன், சுதன், ராஜகோபால், பாலமுருகன், அசோக் ஆகியோர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீன்வலையில் சிக்கியிருந்த மலைப்பாம்பை லாவகமாக வெளியே இழுத்தனர். வலையில் சிக்கியிருந்த மலைப்பாம்பு சுமார் 12 அடி நீளத்தில் இருந்தது. இதுகுறித்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மீனவர் வலையில் சிக்கிய மலைப்பாம்பை, வனத்துறையிடம் தீயணைப்பு படை வீரர்கள் ஒப்படைத்தனர்.


Related Tags :
Next Story