தாம்பரம் மாநகராட்சி பகுதியில் ரூ.89 கோடியில் 29 இடங்களில் மழைநீர் கால்வாய் அமைக்க திட்டம்


தாம்பரம் மாநகராட்சி பகுதியில் ரூ.89 கோடியில் 29 இடங்களில் மழைநீர் கால்வாய் அமைக்க திட்டம்
x

தாம்பரம் மாநகராட்சி பகுதியில் 29 இடங்களில் 25 கி.மீ. தூரத்துக்கு ரூ.89 கோடியே 64 லட்சத்தில் மழைநீர் கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இடங்களை தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு செய்தார்.

சென்னை

இறையன்பு ஆய்வு செய்தார்

சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சி பகுதியில் வெள்ள பாதிப்பு பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் கடந்த முறை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகள் கண்டறியப்பட்டு 29 இடங்களில் 25 கி.மீ. தூரத்துக்கு ரூ.89 கோடியே 64 லட்சம் செலவில் மழைநீர் கால்வாய் அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த இடங்களை நேற்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு செய்தார். அதன்படி கீழ்க்கட்டளை அம்பாள் நகர், அன்பு நகர், எம்.கே.நகர், சாமிமலை நகர், அஸ்தினாபுரம், திருமலை நகர், செம்பாக்கம் வள்ளல் யூசூப்நகர் உள்ளிட்ட பகுதிகளில் அவர் செய்தார்.

அதிகாரிகளுக்கு உத்தரவு

அப்போது இந்த திட்டங்களுக்கு உரிய மதிப்பீடுகளை தயார் செய்து நிதி அனுமதி பெற்று பணிகளை விரைவாக தொடங்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு இறையன்பு உத்தரவிட்டார்.

ஆய்வின்போது நகராட்சி நிர்வாக துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, கமிஷனர் இளங்கோவன், செயற்பொறியாளர் முருகேசன், மண்டல தலைவர் ஜோசப் அண்ணாதுரை, மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் வந்தனர்.

திருவேற்காடு

இதேபோல் மாங்காடு, குன்றத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வெள்ள பாதிப்பை தடுக்க நடைபெறும் பணிகளையும், சிக்கராயபுரம் கல்குவாரியில் எவ்வளவு நீர் தேக்கி வைக்க முடியும்? என்பது குறித்தும் ஆய்வு செய்தார்.

பின்னர் திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட ஏழுமலை நகர், பாலகிருஷ்ணா நகர் உள்ளிட்ட மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் இறையன்பு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்ஆல்பி ஜான் வர்கீஸ், நகர்மன்ற தலைவர் மூர்த்தி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story