மதுபோதையில் சாலையில் அமர்ந்து ரகளை செய்த தனியார் பஸ் கண்டக்டர்
திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் தனியார் பஸ் கண்டக்டர் மதுபோதையில் சாலையில் அமர்ந்து ரகளை செய்தார்.
திருச்சி,
திருச்சி மத்திய பஸ் நிலையத்தை சுற்றி 5-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு எந்நேரமும் கூட்டம் நிரம்பி வழியும். இந்த நிலையில் இங்குள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திய வாலிபர் ஒருவர், மது போதையில் மத்திய பஸ் நிலையம் அருகே சாலையில் அமர்ந்து போவோர், வருவோரிடம் ரகளை செய்து கொண்டிருந்தார். அத்துடன் தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டும் இருந்தார்.
இதுபற்றி மத்திய பஸ் நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகார் செய்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அந்த வாலிபரை அங்கிருந்து செல்லுமாறு கூறினர். ஆனால், அவர் அதை கேட்காமல் தன்னை அப்புறப்படுத்த வந்த போலீசாரின் கைகளை தட்டிவிட்டார்.
இதையடுத்து அவரை பிடித்து தர, தரவென இழுத்து சென்று சாலையின் ஓரத்திற்கு கொண்டு சென்று விட்டனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் தனியார் பஸ் கண்டக்டர் என்பதும், மது போதையில் ரகளை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் எச்சரித்ததுடன், போதையை தெளியவைத்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.