என்.எல்.சி.க்கு உதவும் நிலைப்பாட்டைதமிழக அரசு மாற்ற வேண்டும்
என்.எல்.சி.க்கு உதவும் நிலைப்பாட்டை தமிழக அரசு மாற்ற வேண்டும் என்று கடலூரில் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கூறினார்.
கடலூர்
பயிற்சிக்கூட்டம்
மனிதநேய மக்கள் கட்சி சார்பில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட நிர்வாகிகளுக்கு மக்கள் நலப்பணிகளுக்கான பயிற்சிக்கூட்டம் கடலூரில் நடந்தது. இதற்கு மாநில தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். அப்துல்சமது எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
இதில் மாவட்ட தலைவர் ஷேக்தாவூத், நகர தலைவர் ரஹீம் உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து மாநில தலைவர் ஜவாஹிருல்லா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நிலத்தின் உரிமையை எடுக்க முடியாது
தூத்துக்குடியில் 15-க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த ஸ்டெர்லைட் ஆலையின் அதிபர் அனில் அகர்வால் வருகிற 6-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாட்டுக்கு வருவதை மனிதநேய மக்கள் கட்சி கண்டிக்கிறது. அவரை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
மேல்வளையமாதேவி பகுதியில் சுரங்க பணிக்காக கால்வாய் வெட்டிய விளைநிலங்களுக்கு ஏற்கனவே இழப்பீடு கொடுத்து விட்டோம் என்று என்.எல்.சி.யும், தி.மு.க. அரசும் கூறுகிறது. கையகப்படுத்தப்பட்ட நிலத்தை 5 ஆண்டுகளுக்குள் பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்தவில்லை என்றால் அதன்பிறகு அந்த நிலத்தின் உரிமையை, அரசோ, அரசு நிறுவனமோ எடுக்க முடியாது.
பா.ம.க.வினரை விடுதலை செய்ய...
பாதிக்கப்பட்ட விவசாயிகளின் மனகுமுறல்களின் வெளிப்பாடாகத்தான் பா.ம.க. நடத்திய போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. ஆகவே தமிழக அரசு இதை கவனத்தில் கொண்டு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
மேல்வளையமாதேவி உள்ளிட்ட பகுதிகளில் கால்வாய் வெட்டும் பணியை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
நிலைப்பாட்டை மாற்ற வேண்டும்
2021-ம் ஆண்டு நடந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பூமி வெப்பமயமாதல் குறித்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, இனி நாங்கள் நிலக்கரியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க மாட்டோம் என்று கூறினார். அப்படி இருக்கும் போது, என்.எல்.சி. விரிவாக்கத்திற்கு நிலத்தை கையகப்படுத்துவது தேவையில்லாத வேலை.
என்.எல்.சி. நிர்வாகத்தை இன்னும் சில ஆண்டுகளில் தனியாருக்கு தாரை வார்ப்பது தான் பா.ஜ.க.வின் திட்டம். ஆகவே தமிழக அரசு என்.எல்.சி.க்கு உதவக்கூடிய நிலைப்பாட்டை மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.