பொன்னேரி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த போலீஸ் ஏட்டு பலி


பொன்னேரி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த போலீஸ் ஏட்டு பலி
x

பொன்னேரி அடுத்த கூடுவாஞ்சேரியில் இருந்து பழவேற்காடு செல்லும் நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போலீஸ் ஏட்டு தவறி விழுந்து பலியானார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி திருவாயர்பாடி கிராமத்தில் உள்ள ராமசாமி செட்டி தெருவில் வசிந்து வந்தவர் கமலதாசன் (வயது 44).

சென்னை மேற்கு பகுதி மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையில் போலீஸ் ஏட்டாக வேலை செய்து வந்தார். வேலை நிமித்தமாக கமலதாசன் தன் மோட்டார் சைக்கிளில் பழவேற்காடு நெடுஞ்சாலை வழியே கூடுவாஞ்சேரிக்கு சென்று கொண்டிருந்தார். சாலையில் அவர் வேகமாக சென்று கொண்டிருந்தபோது கமலதாசனின் கட்டுப்பாட்டை மோட்டார் சைக்கிள் இழந்து தடுமாறியது. இதனால் தாறுமாறாக ஓடிய மோட்டார் சைக்கிளில் இருந்து கமலதாசன் நிலை தடுமாறி நெடுஞ்சாலையில் விழுந்தார். விழுந்த வேகத்தில் கமலதாசன் சாலையில் சறுக்கியவாறு சென்று விழுந்தார்.

தலை மற்றும் உடலில் பலத்த காயங்களுடன் சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த கமலதாசனை அப்பகுதியை கடந்து சென்ற வாகன ஓட்டிகள் பார்த்தனர். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். கமலதாசன் உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியிலேயே கமலதாசன் இறந்திருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கமலதாசனின் உறவினர்கள் ஆஸ்பத்திரி வளாகத்தில் கூடினர். மேலும் பொன்னேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கமலதாசன் உடலை கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அவரது உடலை பொன்னேரி அரசு பொது ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story