ஜெட்டாவில் இருந்து மலேசியா சென்ற விமானத்தில் பயணிக்கு நடுவானில் திடீர் நெஞ்சுவலி
ஜெட்டாவில் இருந்து மலேசியாவுக்கு சென்ற விமானத்தில் பயணிக்கு நடுவானில் திடீரென ெநஞ்சு வலி ஏற்பட்டதால் சென்னையில் அவசரமாக தரை இறங்கியது. எனினும் அந்த பயணி உயிரிழந்து விட்டார்.
சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு 164 பயணிகளுடன் விமானம் சென்று கொண்டு இருந்தது. அந்த விமானம் சென்னை வான் எல்லையை கடந்து சென்று கொண்டு இருந்தது.
அந்த விமானத்தில் மலேசிய நாட்டைச்சேர்ந்த வஹாப் அகமது (வயது 39) என்பவர் தனது நண்பருடன் பயணித்து கொண்டு இருந்தார். விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென வஹாப் அகமதுக்கு கடுமையான நெஞ்சுவலி வலி ஏற்பட்டு துடித்தார்.
உடனே அவருடைய நண்பர், இதுபற்றி விமான பணிப்பெண்களிடம் தெரிவித்தார். விமானத்தில் முதலுதவி சிகிச்சை அளித்த அவர்கள், இதுபற்றி விமானிக்கு தகவல் கொடுத்தனர். அப்போது விமானம் சென்னை வான் எல்லையில் பறந்து கொண்டு இருந்ததால் விமானி உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு அவசரமாக மருத்துவ உதவிக்கு தரையிறங்க அனுமதி கேட்டார்.
சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் விமானத்தை சென்னையில் அவசரமாக தரையிறங்க அனுமதி அளித்தனர். மேலும் விமான நிலையத்தில் மருத்துவ குழுவை தயாராக இருக்கும்படியும் உத்தரவிட்டது.
இதையடுத்து சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் அந்த விமானம் அவசரமாக தரையிறங்கியது. தயாராக இருந்த சென்னை விமான நிலைய மருத்துவக்குழுவினர் விமானத்துக்குள் ஏறி பயணியை பரிசோதித்தனர். பயணிக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டுள்ளதால் உடனடியாக அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டியது இருக்கிறது என தெரிவித்தனர்.
சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், மலேசிய பயணி வஹாப் அகமது மற்றும் அவருடைய நண்பருக்கு அவசரகால மருத்துவ விசாவை வழங்கி அனுமதித்தனர்.
பின்னர் இருவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு விமான நிலைய ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் சேர்த்தனர். அங்கு வஹாப் அகமதுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மலேசிய பயணி வஹாப் அகமது மாரடைப்பால் உயிரிழந்தார்.
இது பற்றி சென்னை விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மலேசிய பயணியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு சரக்கு விமானம் மூலம் மலேசியாவுக்கு கொண்டு செல்லவும் சென்னையில் உள்ள மலேசிய நாட்டு தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே சென்னையில் அவசரமாக தரைஇறங்கிய விமானம், மீதமுள்ள 162 பயணிகளுடன் சென்னையில் இருந்து கோலாலம்பூருக்கு புறப்பட்டு சென்றது.
நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம், பயணி ஒருவரின் உயிரை காப்பாற்றுவதற்காக சென்னையில் அவசரமாக தரையிறங்கியும் பயணியின் உயிரை காப்பாற்ற முடியாமல்போன சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.