பூந்தமல்லி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி மருத்துவ கல்லூரி மாணவி பலி
பூந்தமல்லி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி மருத்துவ கல்லூரி மாணவி பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர், தற்போது பூந்தமல்லி அடுத்த கூடப்பாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய மகள் சுபிதா (வயது 21). இவர், வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 4-ம் ஆண்டு பிசியோதெரபி படித்து வந்தார்.
நேற்று கல்லூரியில் தேர்வுகள் முடிந்த நிலையில் நண்பர்களுடன் விழா கொண்டாடிவிட்டு தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் கல்லூரியில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் சர்வீஸ் சாலையில் சென்றபோது பின்னால் வந்த லாரி, இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.
அப்போது சுபிதாவின் தலை மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. லாரி சக்கரத்தில் சிக்கிய சுபிதா தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் பலியான சுபிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக லாரி டிரைவர் தன்ராஜ் (27) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.