மனைவியை கொன்று புதைத்த கொத்தனாருக்கு ஆயுள் தண்டனை
நித்திரவிைள அருகே மனைவியை கொன்று புதைத்த கொத்தனாருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
நித்திரவிளை அருகே உள்ள கல்வெட்டான்குழி பகுதியை சேர்ந்தவர் ஜான் (வயது 53), கொத்தனார். இவருடைய மனைவி லலிதா. இவர்களுக்கு கடந்த 2000-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஜான்சிலா என்ற மகளும், ஜான் சிங் என்ற மகனும் உள்ளனர். இதற்கிடையே லலிதாவின் தங்கை கணவர் இறந்து விட்டார்.
அதன்பிறகு சகோதரியை லலிதா தன்னுடைய வீட்டில் தங்க வைத்தார். அப்போது ஜான், மனைவியின் தங்கையிடம் பழகி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அவருடன் சேர்ந்து வாழ விரும்பி உள்ளார். இதுதொடர்பாக அவரது மனைவி லலிதாவுக்கும், ஜானுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
பின்னர் ஜான் தன்னை கொடுமைப் படுத்துவதாக லலிதா நித்திரவிளை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் ஜானுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து மனைவி லலிதாவை கொலை செய்ய ஜான் திட்டமிட்டார். இந்தநிலையில் கடந்த 27-7-2009 அன்று இரவு வீட்டில் ஜானுக்கும், மனைவி லலிதாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அந்த சமயத்தில் சமையல் அறைக்கு மனைவியை அழைத்துச் சென்று கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் கொலையை மறைக்க லலிதாவின் உடலை வீட்டின் அருகே புதைத்தார்.
இதையடுத்து லலிதாவை காணவில்லை என அவரது உறவினர்கள் நித்திரவிளை போலீசில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜானை பிடித்து விசாரணை நடத்தினர். போலீசாரின் கிடுக்கிப்படி விசாரணையில், லலிதாவை கொன்று புதைத்ததை ஜான் ஒத்துக் கொண்டார். அதைதொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை குழித்துறை மகிளா விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுதாகர் நேற்று தீர்ப்பு கூறினார். தீர்ப்பில் குற்றவாளியான ஜானுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை என கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அரசு வக்கீல் லிவிங்ஸ்டன் ஆஜரானார்.