வியாசர்பாடியில் இரும்பு தகடு ஏற்றிவந்த லாரி சாலையில் கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு
வியாசர்பாடியில் இரும்பு தகடு ஏற்றிவந்த லாரி சாலையில் கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சென்னை வியாசர்பாடி கூட்ஸ் செட்டில் சரக்கு ெரயில் மூலம் கொண்டு வரப்பட்ட இரும்பு தகடு உருளையை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று காலை மணலி நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை வியாசர்பாடி சி.கல்யாணபுரத்தை சேர்ந்த டிரைவர் பாண்டியன் (வயது 60) என்பவர் ஓட்டினார். வியாசர்பாடி-எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் இருந்து மூலக்கடை நோக்கி வேகமாக சிக்னலில் திரும்பிய போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையில் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் சாலையில் யாரும் இல்லாதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த புளியந்தோப்பு போக்குவரத்து உதவி கமிஷனர் பாலசுப்ரமணியம், கொடுங்கையூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வரதன் மற்றும் போலீசார் கிரேன் மூலம் சாலையில் விழுந்து கிடந்த இரும்பு தகடு உருளையை சாலையோரம் அகற்றி வைத்தனர். பின்னர் சாலையில் கவிழ்ந்து கிடந்த லாரியையும் மீ்ட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இதில் லாரி டிரைவர் பாண்டியனுக்கு முகம் மற்றும் கையில் லேசான காயம் ஏற்பட்டது. அவர், ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருப்பதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சாலையில் லாரி கவிழ்ந்ததால் மூலக்கடையில் இருந்து புளியந்தோப்பு வரை சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.